பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2013

இலங்கை அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய அரசிடம் கோரிக்கை!
இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பறிப்பதற்கும், வடகிழக்கு இணைப்பை நிரந்தரமாக தடுப்பதற்கும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஆராய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், கடந்த புதன் கிழமை 5ம் திகதி கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் 13வது திருததச் சட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை பறிப்பதற்கும், வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பை தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும், முயற்சிகள் குறித்தும் பேசப்பட்டது.
இந்நிலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கி அதில் ஈழத்தமிழர்கள் சார்பில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கையெழுத்திட்டுள்ளார் என்ற அடிப்படையிலும் மேலும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படி இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துவரும் நிலையிலும், 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பு இந்தியாவிற்கும் உள்ளது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது
அத்துடன், இது குறித்து இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை சந்திப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்டையில் இந்திய அரசாங்கத்திடம் மேற்குறித்தவர்களை சந்தித்து பேச அனுமதி கோரப்பட்டுள்ளது.
எனினும் அவர்களைச் சந்திக்க முடியுமா? சந்திப்பதற்கான திகதி என்ன? என்பன குறித்தெல்லாம் இந்திய அரசாங்கத்திடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.
எனவே கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. அழைப்பு வந்தால் கூட்டமைப்பிலுள்ள முக்கியஸ்தர்கள் சென்று சந்திப்பார்கள் என அறிய முடிகின்றது என அவர் குறிப்பிட்டார்.