பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூன், 2013

ஜெ.வை சந்தித்த விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
விருதுநகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் க.பாண்டியராஜன் ஜெயலலிதாவை சந்தித்தார். இதன்  எதிரொலியாக
தேமுதிகவினரால் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என கருதி அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து 29 இடங்களை கைப்பற்றினர். இந்நிலையில் எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்த எம்.எல்.ஏக்கள் ஆர்.சுந்தர்ராஜன், தமிழ்மகன் ஆகியோர் முதலில் முதல்வரைச் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ்குமார், சாந்தி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்தித்தனர். இதனால், தேமுதிக தலைமையின் அதிருப்திக்கு ஆளாகினர். அதையடுத்து, தற்போது வரையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், இன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்தார். இதையடுத்து, தேமுதிகவினரால் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதை அறி்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் நகராட்சி 36-வார்டு வ.ஊ.சி தெருவில் உள்ள அவரது குடியிருப்பு வளாகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சூலக்கரை காவல் நிலையம் அருகே உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்கும் மற்றும் சிவகாசியில் உள்ள வீடுகளுக்கும் போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.