பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூலை, 2013


34 வழக்குளில் ஆஜராக ராமதாசுக்கு சம்மன்

மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் 25–ந் தேதி நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் கலந்து கொள்ள பா.ம.க.வினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றனர். மரக்காணம் அருகே சென்றபோது அவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும்
இடையே மோதல் ஏற்பட்டது. இது பெரும் கலவரமாக வெடித்தது.

இதையடுத்து இந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை கோரி விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. பஸ்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக பா.ம.க.வினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நஷ்ட ஈடு வசூலிப்பதற்காக சென்னையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 28 வழக்குகள் தொடர்பாக விசாரணை கமிஷன் முன்

 வருகிற 24–ந் தேதி ஆஜராகும்படி கடந்த 2–ந் தேதி டாக்டர் ராமதாசுக்கு சம்மன் வழங்கப்பட்டது
இந்த நிலையில் சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள 34 வழக்குகளில் டாக்டர் ராமதாஸ் ஆஜராகுமாறு நேற்று மீண்டும் திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சம்மன் வழங்கப்பட்டது. 
அதில் சேலம் மாவட்டத்தில் பதிவான வழக்குகள் தொடர்பாக 23–ந் தேதி மாலை 4 மணிக்கும், திருவண் ணாமலை மாவட்டத்தில் பதிவான வழக்குகள் தொடர்பாக வருகிற 24–ந் தேதி மாலை 3.30 மணிக்கும் சென்னை சேப்பாக்கத்தில் முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் முன்னிலையில் ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது. 
அப்போது டாக்டர் ராமதாஸ் வீட்டில் இல்லாததால் அவரது அலுவலக உதவியாளர் அனந்தகிருஷ்ணனிடம் வானூர் தாசில்தார் கோபால்சாமி இந்த சம்மனை வழங்கினார்.