பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூலை, 2013

கிழக்கு மாகாண சபையின் வளர்ச்சியைத் தடுத்தவர்கள் த.தே.கூட்டமைப்பினர்: சந்திரகாந்தன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களைக் குழப்பி வாக்குளைப் பெற்றுக் கொண்டு, கிழக்கு மாகாண சபையின் வளர்ச்சியைத் தடுத்ததாக மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திலுள்ள கரடியனாறு மகா வித்தியாலயம் 2013ம் ஆண்டு அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கின்ற நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் செந்தில்நாதன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
அதில் பிரதம அதிதியாக சந்திரகாந்தன் கலந்து கொண்டு உரையாற்றும் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் முதலைமைச்சராக இருந்த காலத்திலே சிறுபான்மை சமூகங்களை பாதிக்கின்ற வகையிலே அமையப்பெற்ற எந்தவொரு சட்ட மூலத்தையும் ஆதரிக்கவில்லை. கிழக்கு மாகாண சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட அனைத்து சட்டமூலங்களையும் திருப்பி அனுப்பினோம்.
அப்படி இருந்தும் கிழக்கு மாகாண சபை கலைந்தவுடன் பழி தீர்ப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கோட்பாட்டையும் மறந்து அதாவது இணைந்த வடகிழக்கு என்கின்ற அவர்களது தாரக மந்திரத்தையும் மறந்து நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டது.
கிழக்கிற்கான முதலமைச்சர் யார் என்கின்ற பிரச்சினை எழுந்த பொழுது அதற்கு முற்றுப் புள்ளி வைத்தவர்களும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான். மீண்டும் முதலமைச்சர் பதவி ஒரு தமிழனுக்கு அதுவும் எனக்கு கிடைத்துவிடும் என்பதற்காக தாங்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி தர தயாராக இருக்கின்றோம் என இரா.சம்பந்தன் அறிக்கை வெளியிட்டார்.
இதனால் தான் தமிழ் மக்களுக்கு கிடைக்க இருந்த முதலமைச்சர் பதவி எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு கிடைத்தது எனத் தெரிவித்தார்.