பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூலை, 2013

வீரவன்ச ஆடை அணிந்து வாழ்பவர் என்றால் இந்நேரம் இராஜினாமா செய்திருக்க வேண்டும்: மனோ கணேசன்
ஆடை அணிந்து வாழும் சுரணை உள்ளவர் என்றால் விமல் வீரவன்ச இந்நேரத்துக்குள் தனது பதவியை இராஜினாமா செய்து, அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
முதலில் இலங்கை பற்றிய விசாரணைக் குழுவை ஐநா சபை கலைக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ஆனால் ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன் இந்த கோமாளியை கணக்கில்கூட எடுக்கவில்லை. இவரும் உண்ணாவிரத்தில் சாகவில்லை.
பிறகு பொலிஸ், காணி அதிகாரங்களை அகற்றாமல் வடக்கில் தேர்தலுக்கு அரசு செல்லக்கூடாது. அப்படி சென்றால் அரசில் இருந்து அகன்று விடுவேன் என்று சொன்னார். சிவசங்கர் மேனன் வந்து சொல்ல வேண்டியதை சொன்னவுடன் அரசு தலை வணங்கி 13ம் திருத்தத்தில் கை வைக்காமல் பொலிஸ், காணி அதிகாரங்களுடன் வடக்கு தேர்தலுக்கு செல்கின்றது. ஆனால் வீரவன்ச அரசில் இருந்து விலக வில்லை. இப்போது வடக்கு தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் கூடாது என புதிய கூச்சலை எழுப்புகின்றார் இந்த கோமாளி.
இந்த கோரிக்கையை இவரது அரசு ஏற்காவிட்டால் என்ன செய்வாராம் இவர்? கடலில் குதிக்க போகிறாரா? இவரும், இவரை போன்ற இன்னொரு கோமாளியான சம்பிக்க ரணவக்கவும் ஒன்றில் அரசில் இருந்து வெளியேற வேண்டும். அல்லது வாய்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதி விக்னேஸ்வரனை வடக்கின் முதல்வர் வேட்பாளராக கூட்டமைப்பு அறிவித்தவுடன் சம்பிக்க ரணவக்கவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. விக்னேஸ்வரனை பாலசிங்கத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
சம்பிக்க, தயா மாஸ்டரை அவரது மகிந்த அரசாங்கம் வேட்பாளராக அறிவித்துள்ளது மறந்து விட்டது. விக்னேஸ்வரனை வடக்கின் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் சம்பந்தன் சிங்கள மக்களுக்கு ஒரு நல்லெண்ண செய்தியை அனுப்பியுள்ளார். இதுதான் கடை செய்தி என நான் எண்ணுகின்றேன்.
இலங்கை நாட்டின் நீதிதுறையில் உயர் பதவி வகித்த ஒருவரை நியமித்ததன் மூலம் ஒன்றுபட்ட நாட்டுக்குள் அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு வாழ தயார் என சம்பந்தன் அறிவித்துள்ளார். இதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தை சிங்கள மக்களும், அரசாங்கமும், சிங்கள அரசியல் கட்சிகளும் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதையும் இனவாத கண்ணோட்டத்தில் பார்த்து சம்பிக்க ரணவக்க பாலசிங்கத்துடன் விக்னேஸ்வரனை ஏன் ஒப்பிடுகிறார் என்பதையும், ஒப்பிட்டு சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட முயல்கிறார் என்பதையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இவரது கருத்தை சிங்கள மக்கள் ஏற்றுகொண்டால், சிங்கள மக்களுடன் தமிழர் ஒரே நாட்டில் வாழ முடியாது என்ற அர்த்தம் உருவாகிவிடும் என எச்சரித்து வைக்க விரும்புகின்றேன்.
மாகாணசபை தேர்தலில் நாம் சிலவேளை வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடலாம். ஆனால், எங்கே இருந்தாலும் நாம் இந்த அரசாங்கத்தை எதிர்க்கும் அணியில்தான் இருப்போம். அதுதான் அடிப்படை. வடக்கிலும், மத்திய மலை நாட்டிலும், வயம்ப மாகாணத்திலும் நாம் இதைதான் செய்வோம்.
இந்த தேர்தல் இனவாத மகிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் இயக்கத்தை ஆரம்பிக்கும் தேர்தல் என குறிப்பிட்டார்.