பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

சுவிஸில் இடம்பெற்ற மாவீரர்களின் நினைவுகள் சுமந்த மாபெரும் உதைப்பந்தாட்டப் போட்டி
சுவிட்சர்லாந்து சூரிச் வின்ரத்தூர் நகரில், இளம்றோயல் விளையாட்டுக் கழகம் நடாத்திய மூத்த தாக்குதல் தளபதி லெப். சீலன், வீரவேங்கை ஆனந்த், மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் ஆகியோரின் 30வது ஆண்டு நினைவுகள் சுமந்த மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
இம் மூன்று மாவீரர்களின் திருவுருவப்படங்களுடன், இன உணர்வாளர், தமிழ் திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் மற்றும் 29.06.2013. அன்று ஸ்பானியாவில் அகால மரணமடைந்த ஜேர்மனி துத்ட்ளின்கேன் விளையாட்டு வீரன் பிரகாஷ் ஆகியோரினது திருவுருவப்படங்களும் வைக்கப்பட்டு ஆரம்ப நிகழ்வு ஆரம்பமானது.
பொதுச்சுடர், ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் போட்டிகள் ஆரம்பமானது. இவ் உதைப்பந்தாட்டப் போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டன.
இப் போட்டியில் முதலாவது இடத்தை வெற்றியிட்டிய லுர்சன் யங்க்பட்ஸ் உதைபந்தாட்டக் கழகத்துக்கு மூதூர் தளபதி மேஜர் கணேஸ் அவர்களின் நினைவு வெற்றிக் கிண்ணமும், இரண்டாது இடத்தை வெற்றியிட்டிய சுக் தாய் மண் விளையாட்டுக் கழகத்துக்கு மூத்த உறுப்பினர் கப்டன் லாரா ரஞ்சன் அவர்களின் நினைவு வெற்றிக் கிண்ணமும், மூன்றாவது இடத்தை வெற்றியிட்டிய லிஸ் யங்க்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்துக்கு மட்டகளப்பு தாக்குதல் தளபதி லெப். பரமதேவா அவர்களின் நினைவு வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டன.
மேலும், சிறந்த கழகத்திக்காக மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு வெற்றிக் கிண்ணம் பேர்ன் றோயல் விளையாட்டுக்கழகத்திக்கும், சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்ட சுக் தாய் மண் விளையாட்டுக் கழக வீரர் (சீருடை இலக்கம் 9) கயா அவர்களுக்கு யாழ் மாவட்ட சிறப்புத் தளபதி லெப் கேணல் மதி அவர்களின் நினைவுக் கிண்ணமும், சிறந்த பந்து காப்பாளராக தெரிவு செய்யப்பட்ட லுர்சன் யங்க்பட்ஸ் உதைப்பந்தாட்டக் கழக வீரர் (சீருடை இலக்கம் 1) அகிந்தன் அவர்களுக்கு லெப் கேணல் சரா நினைவுக் கிண்ணமும், இறுதிப் போட்டியின் சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்ட லுர்சன் யங்க்பட்ஸ் உதைப் பந்தாட்டக் கழக வீரர் (சீருடை இலக்கம் 28 வென்னிலனுக்கு லெப். கேணல் ராஜன் நினைவுக் கிண்ணமும், முதலாம் இடத்தை வெற்றி கொண்ட லுர்சன் யங்க்பட்ஸ் உதைப் பந்தாட்டக் கழகத்திக்கு மூத்த தாக்குதல் தளபதி லெப் சீலன், வீரவேங்கை ஆனந்த் நினைவுச் சுற்றுக்கிண்ணமும் அத்தோடு இப்போட்டியில் பங்கு பற்றிய கழகங்களுக்கு நினைவுக் கேடையங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது வீரச்சாவடைந்த இம் மாவீரர்களின் சாதனைகளையும், அவர்கள் வீரச்சாவடைந்த தாக்குதல் நிகழ்வுகள் பற்றி மிகவும் விபரமான முறையில் எடுத்துரைக்கப்பட்டு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
அத்தோடு இச்சுற்றுப்போட்டிக்கு அனுசரணை வழங்கிய அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் இளம்றோயல் விளையாட்டுக் கழகம் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டதோடு, மாலை 7 மணிக்கு பரிசளிப்பு நிகழ்வுடன் இச்சுற்று போட்டி நிறைவு பெற்றது.