பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2013

,

இந்தியாவுடன் ராஜதந்திர முறுகலை ஏற்படுத்த கோட்டாபய திட்டம்?
பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முறுகல் ஒன்றை ஏற்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தது தொடக்கம் இந்தியா மீது கோட்டாபய ராஜபக்ஷ கடும் கோபத்தில் உள்ளார். அதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடர்ச்சியான செயற்பாடுகளை மிகவும் திட்டமிட்ட முறையில் அவர் இரகசியமாக மேற்கொண்டு வந்திருந்தார்.
இந்நிலையில் , இந்தியாவின் தலையீட்டின் மூலமாக இலங்கையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை ஒழித்து இலங்கையின் சகல பகுதிகளிலும் சிங்கள ஆதிக்கத்தை நிலைநிறுவத்துவது பாதுகாப்புச் செயலாளரின் திட்டமாக உள்ளது. இதற்காகவே அவர் தனது பொறுப்பில் பொதுபலசேனாவையும், அமைச்சர் விமல் வீரவங்சவின் பொறுப்பில் ராவணா பலகாயவையும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க பொறுப்பில் சிஹல ராவயவையும் வைத்துக் கொண்டு, அவற்றின் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து வருகின்றார்.
இந்நிலையில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலுக்கு வழிசெய்யும் மாகாண சபை முறையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு கடுமையாக எதிர்க்கிறது. எனினும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான தூதுக்குழு, ஜனாதிபதி மஹிந்தவைச் சந்தித்தபோது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான செயற்பாட்டில் இந்தியா தலையிடக் கூடாது என்று தமது கருத்தை வெளியிட்டிருந்தனர். அதன் பிரகாரம் இலங்கையில் மாகாண சபை ஆட்சி முறை ரத்துச் செய்யப்பட்டாலும் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக அதனை எதிர்க்காது என்ற நம்பிக்கையை அவர்களின் கூற்று ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட பாஜகவின் இன்னொரு மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜும் இது போன்றதொரு கருத்தையே வெளியிட்டிருந்தார்.
இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தற்போது இந்தியாவின் எதிர்க்கட்சியான பாஜகவுடன் தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றார். மறுபுறத்தில் இந்தியாவின் ஆளுங்கட்சிக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை உருவாக்கும் வகையில் காய் நகர்த்தி வருகின்றார். அதன் ஒரு கட்டமாகவே தனது செல்போன் வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றினால் ஒட்டுக் கேட்கப்படுவதாக அவர் பரபரப்பொன்றைக் கிளப்பி விட்டுள்ளார். மிக விரைவில் இந்தியத் தூதரகத்தின மூலமாக ரோ அமைப்புதான் தனது செல்போனை ஒட்டுக் கேட்டது என்ற தகவலை அவர் ஊடகங்கள் வாயிலாக கசிய விடுவார். அது இந்தியாவுக்கு பெரும் ராஜதந்திர சிக்கலை உருவாக்கும் என்று எதிர்பார்கப்படுகின்றது. இதன் மூலம் இந்திய - இலங்கை உறவுக்கும் வேட்டு வைக்க கோட்டாபய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் அமையப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாகவே இலங்கை ராணுவம் இந்தியாவில் பயிற்சி பெறுவதாயின் தமிழ்நாட்டில்மட்டும் தான் பயிற்சி பெற வேண்டும், வேறு எங்கும் பயிற்சி பெற சம்மதிக்க மாட்டோம் என்ற பாதுகாப்புச் செயலாளரின் அழுத்தமும் அமைந்துள்ளது. அதன் மூலம் தமிழ்நாட்டிலும் மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பலையை தீவிரப்படுத்துவது கோட்டாபயவின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசின் மூலமாக இலங்கையின் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான அழுத்தங்களை இல்லாதொழிப்பது அவரது எதிர்பார்ப்பாக உள்ளது.