பக்கங்கள்

பக்கங்கள்

20 செப்., 2013

தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றி! தமிழர் பிரச்சினை சர்வதேசத்தை நோக்கி வேகமாக செல்லும்: அரசியல் விமர்சகர்கள்
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் எதிகாலம் பற்றிய எதிர்வுகூறலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி அதன் தலைமையின் எதிர்காலம் தொடர்பில் மட்டுமன்றி ஜே.வி.பியின் அரசியல் புகழ் மற்றும் எதிர்காலம் தொடர்பிலும் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளனர்.
அதேவேளை தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த தேர்தல் பிரசாரத்திற்கு வடக்கு மாகாண மக்கள் அமோக ஆதரவை வழங்கினால் இலங்கையின் தேசியப் பிரச்சினை வேகமாக சர்வதேசத்தை நோக்கிச் செல்லக் கூடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அதிகளவான பலத்தை கைப்பற்றினால் அது அரசியல் ரீதியாக அரசியல் அமைப்புத் திருத்தங்கள் நோக்கி செல்லக் கூடிய நிலைமைகளையும் ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே அடுத்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த தயாராகி வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் அழுத்தங்களை கொடுக்கும்.
மாகாண சபைகளில் அரசாங்கத்திற்கு இருந்த பலத்தை விட குறைவாக பலத்தை கொடுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியானால் அது ஜனாதிபதிக்கு நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதேநேரம் 2009 ஆம் ஆண்டு வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அரசாங்கம் பெற்ற பலத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் இம்முறை குறைக்க முடியாது போனால் அது அந்த கட்சியையும் அதன் தலைமைத்துவத்தின் அரசியல் எதிர்காலத்தையும் மேலும் வீழ்ச்சியை நோக்கி தள்ளும்.
கடந்த வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6 லட்சத்து 68 ஆயிரத்து 743 வாக்குகளை பெற்று 37 ஆசனங்களை கைப்பற்றியது. ஆளும் கட்சி அந்த தேர்தலில் 69.43 வீத வாக்குகளை பெற்றது.

ஐக்கிய தேசியக்கட்சி அந்த தேர்தலில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 347 வாக்குகளை பெற்றதுடன் 14 ஆசனங்களை கைப்பற்றியது. அந்த கட்சி 28.07 வீத வாக்குகளை பெற்றது. ஜே.வி.பி 20 ஆயிரத்து 428 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றியது.
வடமேல் மாகாணத்தின் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த ஐக்கிய தேசியக்கட்சியின் பிரபலமான உறுப்பினரான தயாசிறி ஜயசேகர இம்முறை ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதாலும் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்குகள் குறையக் கூடும்.
அதேவேளை மத்திய மாகாணத்தில் கடந்த முறை ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆளும் கட்சியுடன் இணைந்துள்ளதாலும் அமைச்சர் தொண்டமான் அரசாங்கத்துடன் இருப்பதும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு அரசியல் ரீதியான பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.