பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2013

வாரம் ஐந்து லட்சம் டாலர் ஊதியம் பெறும் கால்பந்து வீரர்

உலகில் மிகவும் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கப்பட்ட கால்பந்து வீரரான கேரத் பேல் ரசிகர்களின் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

ஸ்பெயினின் ரியல் மட்ரிட் கால்பந்து சங்கம் அவரை 132 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளதை அடுத்து இன்று அவர் மட்ரிட் நகரிலுள்ள பெர்னபௌ அரங்கில் கூடியிருந்த சுமார் 20,000 ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஐரோப்பிய கால்பந்து பட்டயத்தை ஒன்பது முறை வென்றுள்ள ரியல் மட்ரிட் அணிக்கு விளையாடுவது தனது கனவாக இருந்தது என்று ரசிகர்களிடம் அவர் தெரிவித்தார்.
வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பேல் இதற்கு முன்னர் இங்கிலாந்தின் டாட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
130901190904_gareth_bale_304x171_afp_nocredit

ஆறு ஆண்டுகள் ஒப்பந்தம்

ஆறு ஆண்டுகளுக்கு அவர் ரியல் மட்ரிட் அணிக்கு விளையாடும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதாவது அவர் வாரம் ஒன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் டாலர்கள் ஊதியம் பெறுவார்.
அவரை டாட்டன்ஹாம் அணியிலிருந்து வாங்க நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமாகவும், சிக்கலாகவும், நீண்டும் இருந்தன என்று ரியல் மட்ரிட் கால்பந்து சங்கத்தின் தலைவர் ஃப்ளாரெண்டினோ பெரெஸ் அவரை வரவேற்கும் போது நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார்.
தமது அணிக்கு விளையாடுவது என்பது மிகவும் சவாலானதும் கடுமையானது என்று சுட்டிக்காட்டிய பெரெஸ், அதே நேரம் தமது சங்கம் எப்போது விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதையும் நினைவூட்டினார்.
ரியல் மட்ரிட் அணிக்காக பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் ஜினாடென் ஜிடேன், பிரேசிலின் ரொனால்டோ, இங்கிலாந்தின் டேவிட் பெக்கம் உட்பட உலகின் பல பிரபலங்கள் விளையாடியுள்ளனர்.
இதற்கு முன்னர் இதே போல பெருமளவு தொகைக்கு வாங்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ரியல் மட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.