பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2013

நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறத் தவறினால், நீண்ட காலமாக நாம் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்களினுடைய, அல்லது தமிழ் தேசியத்தினுடைய வலு நிச்சயமாக குறைவடையும். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு எழுந்துள்ளது. இதனை உணர்ந்துகொண்டு அவர்கள் அதனைச் செய்வார்கள் என நம்புகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (நேர்காணல்: எம்.நியூட்டன்.)
செவ்வியின் விபரம் வருமாறு:

கேள்வி: வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான வெற்றி வாய்ப்பு எந்தளவிற்கு காணப்படுகின்றது?
பதில்: வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பில் ஒரு பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்கத்திடம் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட சில தேவைகளைப் பூர்த்தி செய்தவர்கள் கூட வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.
தமது சொந்த நலனுக்காக தமிழ் தேசியத்தினை கைவிட முடியுமா? என்ற சிந்தனை வலுக்கத் தொடங்கியுள்ளது. எனவே நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே வெற்றியடையும். இதனை எமது மக்களின் தேசிய உணர்வுகளுக்கு முன்னால் எவருமே மாற்றிவிட முடியாது.
கேள்வி: வடக்கில் இராணுவ அடக்குமுறைகள், அரசாங்க ஆதரவாளர்களின் அடாவடித்தனங்கள் இத்தேர்தல் காலத்தில் எந்தளவில் காணப்படுகின்றன.
பதில்: வடக்கினைப் பொறுத்தவரையும் இத்தேர்தலில் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதைத் தடுப்பதற்காக வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் மறைமுகமாக அச்சுறுத்துகின்ற உளவியல் யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வேட்பாளர்களை நேரடியாக அச்சுறுத்தாது வேட்பாளரின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களிடம் இவ் வேட்பாளர்கள் தொடர்பாக விசாரிப்பது, தகவல்களைத் திரட்டுவது போன்ற செயல்களில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு சில இளம் வேட்பாளர்களும் அச்சமடைந்துள்ளனர்.
மக்களையும் இராணுவம் மறைமுகமாக அச்சுறுத்தி வருகின்றது. குறிப்பாக பொதுமக்களிடம் இராணுவம் விசாரிக்கின்றபொழுது அவர்கள் தம்மை அடையாளப்படுத்தி வெளியே வந்து வேலைசெய்யப் பயப்படுகின்றார்கள். இதனை ஓர் உளவியல் ரீதியாக மக்களை அச்சுறுத்தும் யுக்தியாக செய்து வருகின்றனர்.
இதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் இப்பிரதேசத்தில் அபிவிருத்திகள் நடக்காது எனவும், தாம் வென்றால் தான் பிரதேசம் அபிவிருத்தி அடையும் எனவும், வாக்குப் பெட்டிகளுக்குள் நீங்கள் யாருக்கு வாக்களித்துள்ளீர்கள் என்பதை நாம் பார்ப்போம் எனவும் மக்களை ஏமாற்றுகின்றனர்.
இது சாதாரணமாக பாமர மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், தமிழர்களைப் பொறுத்தவரையில் எழுபது வீதமளவில் படித்தவர்களே இருக்கின்றார்கள். இதனால் இவர்களுடைய இத்தகைய யுக்திகள் தேர்தலில் பெரியளவான தாக்கத்தினை ஏற்படுத்துமென நான் கருதவில்லை.
கேள்வி: தென்பகுதியில் இருந்து வந்தவர்களை வடக்கிற்கு வரவழைத்து கள்ள வாக்களிக்கச் செய்வது மற்றும் தேர்தல் கடமைகளில் தென்பகுதி அரசாங்க அதிகாரிகளை நியமிப்பது என இரு விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இவ்விடயத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்: கடந்த 1981ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் அரச அதிகாரிகள் என வீதிகளில் நின்றவர்களையும் வடக்கில் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தியது. ஆனால் அத்தேர்தலிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியே வெற்றி பெற்றது. அளவுக்கதிகமான மோசடிகளில் ஈடுபட்டால் அது மக்கள் மத்தியில் எமக்கு சாதகமான மாற்றத்தினைக் கொண்டுவரும் என்பதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் 81ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட நிலைமை இன்று இல்லை. நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் இத்தேர்தலை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அவர்களின் வேண்டுகோளுக்கு அமையவே இத்தேர்தல் நடைபெறுகின்றது. சர்வதேச கண்காணிப்பாளர்களும் இப்பகுதிக்கு வந்துள்ளனர். எம்முடனும் கலந்துரையாடியுள்ளனர்.
ஆகவே இவர்களுடைய இத்தகைய முயற்சி எமக்கு சாதகமான நிலைப்பாட்டினையே ஏற்படுத்தும். இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு அவர்கள் சிலவேளைகளில் தேர்தலை வெல்லலாம். ஆனால் அது தமிழ் தேசியத்திற்கும் எமது மக்களுக்கும் சாதகமானதாகவே அமையும் என்பதே முடிவாகும்.
கேள்வி: தேர்தல் ஆணையாளர் நழுவல் போக்குடன் செயற்பட்டு வருகின்றார் எனவும் ஆணையாளர் யாழ் குடாநாட்டில் நின்ற பொழுது தமிழ் தேசியக் கூட்டத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தினை தடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவ்விடயத்தில் தங்களுடைய கருத்து என்ன?
பதில்: தேர்தல் ஆணையாளர் சுதந்திரமான ஒரு தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஆணையாளர் அல்ல. வட மாகாணசபைத் தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடத்திமுடிக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். ஆனால் இதனை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சட்டத்திற்கு அமைய அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அவரால் சிலவற்றை செய்ய முடியாது.
உதாரணமாக இராணுவத்தை தேர்தல் காலங்களில் முகாம்களுக்குள் முடக்குமாறு கோருகின்றோம். ஆனால் இதனைச் செய்வதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரமில்லை. அரசாங்கமே செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் அதனை ஒருபோதும் செய்யாது.
தேர்தல் ஆணையாளரைப் பொறுத்தவரையில் அவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இத் தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்த முயற்சிப்பார் என நாம் நம்புகின்றோம்.
கேள்வி: தேர்தல்களில் இராணுவத் தலையீடு அதிகாரித்தால் தேர்தலை இரத்துச் செய்யவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள கருத்து தொடர்பாக?
பதில்: தேர்தல் காலங்களில் இராணுவத் தலையீடுகள் அதிகரிக்குமாயின் அத்தகைய வாக்குச்சாவடிகளை இரத்துச் செய்யவுள்ளதாக அவர் எம்மிடம் தெரிவித்துள்ளார். அந்தளவிற்கு அவர் செல்வாரென நாம் நம்புகின்றோம். எனவே நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் தேவையை உணர்ந்து மக்கள் எமது கட்சியாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும். (நன்றி).
- See more at: http://www.athirady.com/tamil-news/interviews/263569.html#sthash.2SLMV9vz.dpuf