பக்கங்கள்

பக்கங்கள்

20 செப்., 2013

அனந்தி சசிதரன் (எழிலன்) வீட்டின் மீதான தாக்குதலுக்கு த.தே.மக்கள் முன்னணி கண்டனம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி அனந்தி சசிகரன் (எழிலன்) வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன்று அதிகாலை 1.00 மணியளவில் தொல்புரம், வளக்கம்பரையில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி அனந்தி சசிகரன் (எழிலன்) அவர்களது வீட்டினை சுற்றிவளைத்து உள்நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
அத்தாக்குதலில் அனந்தியின் ஆதரவாளர்கள் எண்மர் காயமடைந்துள்ளனர். மேற்படி சம்பவத்தை அறிந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ் அவர்களையும் இராணுவத்தினர் மிலேச்சத்தனமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாத ஜனநாயக விரோத அரசின் தமிழர் விரோதச் செயற்பாட்டின் ஓரங்கமாகவே இச்சம்பவத்தை பார்க்கின்றோம். தமிழ் மக்களின் தனித்துவமான அடையாளத்தினை பிரதிபலிப்பவர்கள் மீதான இத்தகைய தாக்குதலானது இனவாத அரசின் போருக்குப் பிந்திய கட்டமைப்பு சார் இன அழிப்பின் நீட்சியாகும்.
குறிப்பாக திருமதி அனந்தி எழிலன் அவர்கள் காணாமற்போன உறவுகளை மீட்பதில் அவர்களுக்காக போராடுவதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் இத்தகைய செயற்பாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரின் மனைவி என்பதுமே இவர் குறிப்பாக இலக்கு வைக்கப்படக் காரணமாகும். கோழைத் தனமான இத்தகைய தாக்குதல்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறாது தடுக்கப்பட வேண்டுமாயின் தமிழ்த் தேசமானது, சிங்கள தேசத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒரு நாட்டிற்குள் இறைமையுள்ள தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் இணைந்த வகையில் உருவாகும் தீர்வு ஒன்று அடையப்படுவதே ஒரே வழியாகும் என்பதனைவே மேற்படி தாக்குல் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.