பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2013

விடுதலைக்கேங்கும் மக்கள் கருத்தால் முரசறையும் போர்க்களம்!


மாவை சேனாதி அவர்களின் முகநூலில் இருந்து 
முள்ளிவாய்க்காலில், தமிழ் மக்களை கொத்துக்கொத்தாய்க் கொன்று குவித்து, ஒரு இனஅழிப்பை நடத்தி முடித்த சிங்களம், அழித்துச் சிதைக்கப்பட்ட தமிழினம், சிங்களத்தின் ஆட்சியதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, கீழ்ப்பட்டு நிற்கும் ஒரு புதியதொரு காலத்தையே எதிர்பார்த்து நின்றது.ஆனால், சிங்களத்தின்
அந்தக் கனவை சிதைவுறச் செய்யும் வண்ணம், தாயகத்தில் வாழும் மக்களும், புலம் பெயர்ந்து வாழும் மக்களும், உலகத் தமிழர்களும், புதிய பாதை வகுத்து, தேசிய விடுதலை நோக்கி தமது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாயகத்தில், தமிழ்த் தேசியத் தளத்தைச் சிதைவுறச் செய்ய, சிங்களப் பெரும் தேசியவாதம் மிகக் கடுமையாக முயற்சித்து வருகின்றது.

                                           தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துச் சிதைக்க அது பலவழிகளில், முயன்றது, தற்போதும் முயன்று வருகின்றது. தமிழ்த் தேசியத்தை சிதைத்துவிட சிங்களப் பேரினவாதம் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளையும் வெற்றிகொண்டு, தமிழ்த் தேசியத் தளத்தைப் பத்திரமாய்ப் பாதுகாத்தல் என்பது எமது வரலாற்றுக் கடமையாகின்றது.முள்ளிவாய்க்காலின் பின்னரான கடந்த நான்காண்டு காலத்தில், சிங்களத்தின் அனைத்துக் கூறுகளும், தமிழ்த் தேசியத்தின் வீரியத்தை வலுவிழக்கச் செய்ய பலப்பல வழிகளில் முயன்றன.அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை பேசியும், ஆதரவாய் தோள் தருவதாய்ப் பாவனை செய்தும், தமிழினத்தை தமது கைக்கடக்கமான சிற்றினமாக கையாளவே சிங்களத்தின் அனைத்துத் தரப்பும் விரும்பியது என்பது தற்போது வெளிப்பட்டு நிற்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அனைத்து சிங்களத் தரப்பும் முன்வைத்த விமர்சனங்கள், அதையே நிரூபித்து நிற்கின்றன.

                                 தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களாக, கடந்த நான்கு ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருந்த பௌத்த சிங்களப் பேரினவாதிகளை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் கோபமுறச் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ்மக்களின் தேசிய அவாவை வெளிப்படுத்தி நிற்பதே அதற்குக் காரணம்.
சிங்களப் பேரினவாதிகளின் எதிர்பார்ப்புப்போல், அபிவிருத்திப் பணிகள், வேலை வாய்ப்பு, பசி பட்டினி, வறுமை ஒழிப்பு, மின்சார விநியோகம், சுற்றுச்சூழல் சுகாதாரம் என்ற பாணியில், மாகாணசபைத் தேர்தல் என்ற மட்டத்தில், இனத்தின் தேவை குறுகித் தேயாமல், ஒரு தேசிய இனத்தின் விடுதலை வாழ்வை அவாவும் ஆவணமாக அது வெளிவந்திருக்கின்றது.
வீதிகள் அமைப்பதிலும், பாலங்கள் அமைப்பதிலும், கட்டிடங்கள் எழுப்புவதிலும், அபிவிருத்தி செய்வதிலும், தமது தேசிய நோக்கத்தை மறந்து, ஏமாறும் இனமாக இல்லாமல் ஒரு வீரியம் மிக்க, உறுக்குறுதிவாய்ந்த விடுதலைப் பற்றுடன் பயணிக்கும் ஒர் இனம் என்பதை மீண்டும் சிங்களத்திற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் எடுத்துக்காட்டும் ஒரு தேர்தலாக இத்தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

                             முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், யாவும் நலமே என்ற பாணியில், சிங்களத் தலைமைகள் கதைகூறிவருகின்றன. இனப்பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இனவாதிகள் கூறிவருகின்றனர். எனவே தீர்வு பற்றிய பேச்சுக்களோ முயற்சிகளோ அவசியமற்றவை என, அவர்கள் கூறிவருகின்றனர்.தமிழ்மக்களின் நிலையை அனைத்துலக சமூகம் ஓரளவு புரிந்து வைத்திருக்கின்றது. அங்குள்ள நிலைமைகள் குறித்து அறிந்துகொள்ளும் பயணங்களை, அனைத்துலகப் பிரமுகர்கள் தமிழர் தாயகத்திற்கு அடிக்கடி மேற்கொள்கின்றனர்.அனைத்துலக சமூகம் தமிழ்மக்கள் மீது, அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ள இக்காலகட்டத்தை, எமக்குக் கிடைத்த அரிதான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, எமது தேசிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தும், சந்தர்ப்பமாகவே இத்தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்.தோன்றியிருக்கும் சாதகமான அனைத்துலகச் சூழ்நிலையில், தமிழ்த் தேசியத்தின் நிலைப்பாட்டை முரசறையும் தேர்தலாக இதனைக் கருத்திற்கொண்டு செயற்படுவோம்.

                விடுதலைக்காகப் போராடும் ஒரு இனம், காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ப, பலப்பல வழிகளில், பலப்பல வடிவங்களில் தனது போராட்டத்தை தொடரவே செய்யும். அதன் வினைத்திறன் வேகங்களில் மாறுபாடுகள் ஏற்பட்டாலும், அது தனது இறுதி இலக்கு நோக்கி உறுதியாக முன்னேறும். இதற்கு அடிப்படையான தேசிய உணர்வும் இனப்பற்றும் தேசியத் தளமும் பாதுகாக்கப்படவேண்டும். அதுவே முக்கியமானது. ஆயிரமாயிரம் மாவீரர்களின் குருதியில் புனிதப் பட்ட மண்ணில், அவர்களின் மூச்சுக்காற்று வீசிக்கொண்டிருக்கும் புனிதபூமியில், எந்த மக்களிற்காக அவர்கள் மரணத்தைத் தழுவினார்களோ, அந்த மக்களின் விடுதலைக்கான அரசியல் மட்டுமே அந்த மண்ணில் தளைத்தோங்க வேண்டும்.

                        தேசியத் தலைவரின் சிந்தனையில் உதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசியத் தலைவர் சுட்டிக்காட்டிய எம்மக்களின் விடுதலை வாழ்வு என்ற இலட்சியத்தை நோக்கி சுயநலமின்றி அர்ப்பணிப்புடன் முன்னேற தமது ஆதரவை முழுமையாக வழங்கவேண்டும்