பக்கங்கள்

பக்கங்கள்

13 அக்., 2013

புதிய ஸ்காபுறோ வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்த றாதிகா சிற்சபைஈசன்

கனடாவின் “ஸ்காபுறோ றூஜ் றிவர் தொகுதியில் வாக்காளப் பெருமக்களாகிய உங்களது ஆதரவுடன் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டிய நான் தொடர்ந்தும் உங்களுக்கு
சேவையாற்றும் வகையில் 2015ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட உள்ளேன்.
எனது தொகுதி தற்போது ஸ்காபுறோ வடக்கு, ஸ்காபுறோ றூஜ் பாக் என இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புதிய தொகுதியான ஸ்காபுறோ வடக்கு தொகுதியில் என்.டி.பி.கட்சியின் சார்பில் நான் போட்டி இடவுள்ளேன்.
இச்செய்தியினை இன்று வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வைத்து அறிவிப்பதை இட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
எனது ஆதரவாளர்களாகிய நீங்கள் பெருமளவில் திரண்டு வந்திருப்பது உங்கள் ஆதரவு என்றென்றும் எனக்கு உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் ஆதரவினாலும், விநாயகப் பெருமானின் திருவருளினாலும் மீண்டும் எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்டு உங்களுக்காக சேவையாற்றுவேன்.”
நவராத்திரி விழாக் காலத்தில் கலைமகளுக்குரிய தினமான இன்று வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் றாதிகா சிற்சபைஈசன் பெற்றோர்கள் சகிதம் வழிபாடியற்றிய பின்னர் இவ்வறிவித்தலை விடுத்தார்.
மக்கள் கரகோஷம் செய்து அதனை வரவேற்றார்கள். “கடந்த பொதுத் தேர்தலின் போதும் தைப் பொங்கல் தினத்தன்று இதே ஆலயத்தில் வழிபாடியற்றிய பின்னர் அச் செய்தியினை அறிவித்தேன். அதே போன்று இம்முறையும் இங்கே வைத்து அறிவிக்கின்றேன்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் தொகுதி எனது தொகுதியான ஸ்காபுறோ றூஜ் றிவர் தொகுதியின் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்களை உள்ளடக்கியதாக வடக்கே ஸ்ரீல் வீதி வரை விஸ்த்தரிக் கப்பட்டுள்ளது.
அதனால் உங்கள் அனைவரினதும் ஆதரவு எனக்கு இருக்குமென திடமாக நம்புகின் றேன். அதற்காக முன்கூட்டியே எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”.
றாதிகாவின் வெற்றிக்காக விஷேட பூசை நடாத்திய ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குருவான சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி, சக்தி வடிவிலான கலைமகளின் திருவருளினாலும், விநாயகப் பெருமானின் கருணையினாலும் றாதிகா தேர்தலில் வெற்றி ஈட்ட வேண்டுமென வாழ்த்தினார். அத்துடன் அங்கு திரண்டிருந்த பொது மக்களும், ஊடகவியலாளர்க ளும் றாதிகாவிற்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஒரு தேர்தல் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளமைக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புத் தான் காரணமா எனக் கேட்ட போது ஆம் அது தான் காரணம். எனது தொகுதியில் ஒரு லட்சத்தி நாலாயிரமாக இருந்த வாக்காளரின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தி நாற்பதாயிரமாக அதிகரித்துள்ளது என றாதிகா விளக்கினார்.