கட்டுவனில் இரவிரவாக அரங்கேறும் காட்சி நல்லிணக்கத்துக்கு கறுப்புப் புள்ளி குத்தவா? |
நீங்கள் எதனைச் சொன்னாலும், நாம் முன்வைத்த காலைப் பின்வைக்கும் பிரகிருதிகள் அல்லர். கொழும்பு அரசு சொன்னதைச் செய்வோம். இதனை உங்கள் மனதில், நெஞ்சில் பதித்துக்கொள்ளுங்கள்
நீங்கள் எதனைச் சொன்னாலும், நாம் முன்வைத்த காலைப் பின்வைக்கும் பிரகிருதிகள் அல்லர். கொழும்பு அரசு சொன்னதைச் செய்வோம். இதனை உங்கள் மனதில், நெஞ்சில் பதித்துக்கொள்ளுங்கள்
வடக்கு மாகாண சபையின் ஆட்சியாளர்களுக்கு, அவர்கள் பதவியேற்ற இரண்டு நாள்களில் மேற்கண்ட தோரணையில் சவால் விட்டிருக்கிறது அரசின் பாதுகாப்புப் படை.
உயர் பாதுகாப்பு வலயம் என்று பெயரிடப்பட்ட வலி.வடக்கின் ஓர் பகுதியான, கட்டுவன் கெற்றப்போல் சந்திக்கு அண்மையில் உள்ள வீடுகள், அடையாளம் தெரியாதவாறு, இரவு பகல் பாராது இடித்து அழித்துத்துவம்சம் செய்யப்படுகின்றன.
முதலில் அந்தப் பிரதேசத்தில் மண்டியிருந்த பற்றைக்காடுகள் வெட்டி அகற்றப்பட்டன. அந்த முன்னோட்டத்தின் பின்னர் இரவிரவாக அங்கு அமைந்திருந்த வீடுகள்- எமது மக்கள் தமது கடின உழைப்பில் தேடிய பணத்தைக் கொண்டு நிர்மாணித்த வீடுகள்- தரைமட்டமாக்கப்பட்டன. அந்தப் பாதகப் பணிகள் இடைவெளி இன்றித் தொடர்ந்தன; தொடர்ந்து கொண்டே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனரக வாகனங்களின் உதவியுடன், வீடுகள் அமைந்திருந் தமைக்கான தடயம் தானும் தெரியாதவாறு வெற்றுக்காணிகள் கம்பி வேலிகளுக்குள் ""அமுக்கப்படுகின்றன''. இந்த வகையில் சுமார் இருநூறு வீடுகளையும் மற்றும் கட்டடங்களையும் தரைமட்டமாக்கும் வள்ளீசான திட்டம், இன்னும் சில தினங்களில் வேகவேகமாகச் செய்து முடிக்கப்பட்டுவிடும், பாதிப்புறும் நமது மக்களோ இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைதடி, நாவற்குழியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், புதிதாக இராணுவ முகாம்களை அமைக்கும் பணிகள் மேன்மேலும் தீவிரம் அடையும் என்பதற்குக் கட்டியம் கூறும் செயற்பாடாக இருக்குமோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மனங்களில் இயல்பாகவே எழுந்திருந்தது.
அதனைச் சரி என்றாக்கும் வகையில், வலி.வடக்குப் பகுதியில் உள்ள வீடுகளை அழித்து, அவை அமைக்கப்பட்டிருந்த காணிகளை பலாலி விமான நிலையத்தோடு சேர்க்கும் திட்டம் ஒன்று அரசினால் வகுக்கப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளத் தக்கது. அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், சுமார் 23 வருடங்களாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள், தெரிந்தவர்களின் ஒட்டுக்குந்துகளிலும், நாள்களை உச்ச விரக்தியுடன் கழித்து வருகிறார்கள்.
வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கினால் படையினரின் (அரசின்) காணி பறிப்பும், மற்றும் படை விலக்கலால் (அல்லது குறைப்பு) போன்ற தமது பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகள் ஓரளவிலேனும் கிடைக்கும் என்று எங்கள் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவை குறித்து ஏறெடுத்தும் பார்க்கமாட்டோம் வேண்டுமானால் மேலும் தீவிரமாக்குவோம் அதனையும் அதிவேகத்தில் விரைந்து செய்து காட்டுவோம் என்று-
வடக்கு மாகாணசபைக்கு, மக்களால் அமோக நிலையில் பெரும் எழுச்சியுடன் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குச் சவால்விடும் வகையில், வலி.வடக்கில்- கட்டுவன்- பிரதேசத்தில் எச்சரிக்கைச் சமிக்ஞை, சிவப்பு விளக்குத் தூண்டப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கான இட வசதிகளையும் வாழ்வாதார வசதிகளையும் அரசு பெற்றுத் தந்தால், வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவோம்- என்று அதன் பேச்சாளர் பிரிகேடியர் ரூவன்வணிக சூரியா கடந்த வாரம் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
ஒட்டு மொத்தத்தில் மக்கள் அரசு ஒன்று வடக்கில் தோற்றுவிக்கப்பட்ட போதிலும், அதன் சொல் (கொழும்பு அரசின்) சபை ஏறாது என்பதனையே இராணுவப் பேச்சாளர் பூடகமாகக் கூறினார் என்று கொள்ளலாம். மூன்று நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு நடைபெற்ற போது, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெற்கு அரசுக்கும் மக்களுக்கும் நேசக்கரம் நீட்டியிருந்தார்.
தமிழ் மக்களின் அவலங்களைப் போக்க மத்திய அரசுக்கு ஒத்துழைப்புக்கரத்தை, நேசக்கரத்தை நீட்ட நாம் தயாராகவே இருக்கிறோம்
அரசுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியுமானால் ஜனநாயகத்தை எமது வடக்கு மண்ணில் நிலைபெறச் செய்யலாம்
மக்களின் அவலங்களைப் போக்குவதற்கு இணைந்துகுழுமித்துச் செயலாற்றலாம்
தனது உயரிய இராஜதந்திரத்தைக் காட்டுவதற்கு அரசுக்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது
தமக்குரிய- தமக்கே உரித்தான- உரிமைகளை அனுபவித்து இடைஞ்சல்கள்- இடையூறுகள் இன்றி தமது மக்கள்- தமிழ் மக்கள்- வாழ வேண்டும் என்ற தூரநோக்குடன் முதலமைச்சர் தெரிவித்த ஆக்கபூர்வமான கருத்துக்களை, உள்வாங்க விருப்பமின்றியே கட்டுவன் ""களபுளா'' தொடங்கப்பட்டிருக்கிறது என்று கருதுவது தப்பன்று.....
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼