பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2013

புலிகள் செய்த போர் குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்!- கெலும் மக்ரே
இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என தாம் கூறவில்லை, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பிலும் உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்  என சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக மாத்திரமல்ல அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் மேற்கொண்ட போர் குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் என்னிடம் இல்லை. புலிகள் அமைப்பும் போர் குற்றங்களை செய்தது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
பிரித்தானிய பிரஜையான நான் பிரித்தானியா ஈராக்கில் செய்த போர் குற்றங்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தினேன்.
சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படங்களுக்கு முதலில் ஜெர்மனியில் உள்ள இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் பங்களிப்பை வழங்கினர்.
அந்த அமைப்பின் பின்னணி குறித்து நான் ஆராயவில்லை. புலிகளின் ஒப்பந்தகாரன் என்று என்னை குற்றம் சுமத்துகின்றனர். எனினும் நான் ஒரு ஊடகவியலாளன். ஆய்வு ரீதியான செய்திகளை தேடுவதே எனது பணி.
ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் படி 40 ஆயிரம் பேர் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டுள்ளனர். எனக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி 70 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்.இவர்களை கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எத்தனை பேர் காணாமல் போயினர் என்பது எம்மில் யாருக்கும் தெரியாது. இதனால் தான் அதனை கண்டறிய வேண்டும்.