பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவது சட்டவிரோதமானதா?! குடிவரவுச் சட்டங்களை இலங்கை துஷ்பிரயோகம் செய்கிறது!- ஐதேக குற்றச்சாட்டு-BBC
இலங்கை அரசாங்கம் நாட்டின் குடிவரவுத்துறை சட்டங்களை தவறாகப் பயன்படுத்தியே தான் விரும்பாத சர்வதேச நபர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி வருவதாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது. 
நாட்டுக்குள் சுற்றுலா வீசா அனுமதியில் வருவோர் தொழில்சார் சந்திப்புகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற காரணத்தைக் கூறியே அரசாங்கம் கடந்த சில வாரங்களில் பல சர்வதேச நபர்களை நாட்டிலிருந்து வெளியேற்றியது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
ஆனால் இலங்கையில் கஸினோ சூதாட்ட செயற்திட்டத்தில் முதலீடு செய்யக் காத்திருக்கின்ற அவுஸ்திரேலியாவின் செல்வந்தர் ஜேம்ஸ் பக்கர் சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் வந்து, வர்த்தக சந்திப்பொன்றில் உரையாற்ற அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஊடகவியலாளர்கள் இருவரை அரசாங்கம் நாட்டிலிருந்து வெளியேற்றியது. சுற்றுலா வீசாவில் வந்து கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டமையாலேயே வெளியேற்றுவதாக காரணம் கூறப்பட்டது.
இலங்கையில் கஸினோ சூதாட்டத்தில் முதலிட வருகின்ற ஜேம்ஸ் பக்கர் இங்கு சுற்றுலா வீசாவில் தான் வந்திருக்கிறார்.
ஜேம்ஸ் பேக்கருக்கு ஒரு சட்டமும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு இன்னொரு சட்டமும் இருக்க முடியாது என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.
அரசின் இரட்டை நிலைப்பாடு?
அவ்வாறே, இரண்டு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கம் கைது செய்திருக்கிறது. அவர்கள் சுற்றுலா வீசாவில் வரவில்லை. இங்கு ஆய்வுரீதியான நடவடிக்கைகளுக்காக வருவதற்கான வீசா அனுமதியை இலங்கை அரசாங்கமே வழங்கியிருந்தது. அப்படியிருந்தும் அவர்களை கைதுசெய்து அரசாங்கம் வெளியேற்றுகின்றது.
அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியதாகத்தான் குற்றச்சாட்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவது சட்டவிரோதமானதா' என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அரசாங்கத்தின் தேவைக்காகத்தான் குடிவரவுத்துறை சட்டங்களை அரசாங்கம் தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டினார்.
ஆனால் நாட்டின் சட்டம் சகலருக்கும் பொதுவானது என்றும், ஊடகவியலாளர்கள் என்ற அந்தஸ்து காரணமாக அவர்களுக்கு அந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும் இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
ஜேம்ஸ் பக்கருக்கு மட்டும் அந்த சட்டத்தில் எப்படி விலக்கு அளிக்கப்பட்டது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து சுற்றுலா பயணி என்ற வகையிலோ அல்லது வர்த்தகர் என்ற வகையிலோ வர்த்தக நடவடிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று பதில் கூறினார் இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல.