பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2013

தமிழகத்திற்கு சென்றுள்ள புலிகளின் செயற்பாட்டாளரை தேடும் இந்திய அதிகாரிகள்
அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளரான கத்தோலிக்க மதகுருவை இந்திய அதிகாரிகள் தேடி வருவதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் இந்த செயற்பாட்டாளர் தொடர்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய உள்துறை அமைச்சின் உதவியுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இந்திய உள்துறை அமைச்சு தமிழகத்தின் உதவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த கத்தோலிக்க மத குரு மீது பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு பிரிவு அமெரிக்க நீதிமன்றத்தில் முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தாக சுப்ரமணியம் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலிகளின் இந்த செயற்பாட்டாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், புலிகளுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுக்கு இஞ்சம் கொடுக்க முயற்சித்தார்.
அமெரிக்காவின் சமஷ்டி விசாரணை பிரிவு இந்த நபருக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பித்துள்ளதுடன் இன்றும் தேடியும் வருகிறது.
அவர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். என்.டி.ரி.வி மற்றும் சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சிகளில் அண்மையில் நடந்த இலங்கை தொடர்பான விவாதங்களில் இவர் கலந்து கொண்டிருந்தார். இதன் மூலம் அவர் தமிழ் நாட்டில் எங்கோ ஒரு இடத்தில் மறைந்திருப்பது தெளிவாகியுள்ளது.
இந்த விடுதலைப் புலி உறுப்பினர் தப்பிச் சென்று விடாமல் இருக்க உள்துறை அமைச்சு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்காவில் குற்றவியல் வழக்கை எதிர்நோக்கி வரும் இந்த நபரை கைது செய்து நாடு கடத்த தமிழக முதலமைச்சருக்கு உதவ வேண்டும் என்றும் சுப்ரமணியம் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.