பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2013

நிந்தவூரின் குழப்பகரமான சூழ்நிலை தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை
நிந்தவூர் பிரதேசத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், அவசர பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பித்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்விலேயே அவர் இந்த அவசர பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த இரண்டு வார காலமாக நிந்தவூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கொள்ளை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய மர்ம நபர்களை ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுமக்கள் மடக்கிப் பிடித்த போதிலும் அவர்களை விசேட அதிரடிப் படையினர் காப்பாற்றிக் கொண்டு சென்ற சம்பவத்தைக் கண்டித்துள்ள மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், இது தொடர்பில் பக்க சார்பற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் விடயத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் விசேட அதிரடிப் படையினர் ஒருதலைப் பட்சமாக மேற்கொண்ட மிகவும் மூர்க்கத்தனமான நடவடிக்கை காரணமாகவே நிந்தவூரில் குழப்பகரமான நிலை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், இந்நிலை ஏனைய ஊர்களுக்கு பரவக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
இது விடயத்தில் அரசாங்கமும் பாதுகாப்புத் துறையும் நீதியாக செயற்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க அவசர நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டும் என்றும் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் கேட்டுக் கொண்டார்.