பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2013

காமன்வெல்த்! மன்மோகன் சிங் தலைமையில் ஆலோசனை! இலங்கை பயணம் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடிப்பு!
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வது பற்றி முடிவு எடுப்பதில் குழப்பம் நிலவுகிறது. 
டெல்லியில் பிரதமல் இல்லத்தில் அவரது தலைமையில்
வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுசில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாடு தொடர்பாக சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்களின் கருத்துக்களை மன்மோகன் சிங் கேட்டறிந்தார்.

பிரதமர் கலந்து கொள்ளலாம் என்று சிலரும், கலந்துகொள்ளக் கூடாது என்று சிலரும் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இலங்கை பயணம் தொடர்பாக முடிவு எடுப்பதில் குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மறுத்துவிட்டனர். காமன்வெல்த் மாநாடு நடக்க ஒரு வார காலமே உள்ளதால் மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளது.