பக்கங்கள்

பக்கங்கள்

10 நவ., 2013

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் அவர்களே தலைமை தாங்குவார் என்று பிடிஐ செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி, இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்க வட்டாரங்கள் கூறியதாக வந்துள்ள இந்தச் செய்திகளின்படி, இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு
அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஞாயிறன்று பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து இலங்கை ஜனாதிபதிக்கு அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்ற இந்த முடிவு குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பினரும் இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று கேட்டிருந்தனர்.
அதேவேளை திமுக தலைவர் கருணாநிதி, பிரதமரின் இந்த முடிவு தமக்கு ஓரளவு ஆறுதல் தருவதாகக் கூறியுள்ளார். அந்த மாநாட்டில் இந்தியா முழுமையாக கலந்துகொள்ளக் கூடாது என்பதுதான் தமது கோரிக்கை என்றும், ஆனாலும் பிரதமரின் முடிவு தமக்கு ஓரளவாவது ஆறுதலைத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
BBC