பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2013

தம்புள்ள பத்திரகாளி அம்மன் ஆலயத்தை உடைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துக! ஜனாதிபதிக்கு யோகேஸ்வரன் எம்.பி. மகஜர்
தம்புள்ள தமிழ் மக்களால் 40 வருடத்துக்கு மேலாக வழிபட்டு வந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை இடித்தவர்களை அரசாங்கம் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்த மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தம்புள்ள கிராமத்தில் தம்புள்ள பிரதான வீதியை அண்டி வாழும் 42 குடும்பங்களை சேர்ந்த தமிழ் மக்கள் திட்டமிட்ட மதவெறி கொண்ட விசமிகளின் சதி முயற்சி காரணமாக கடந்த ஆனி மாதமளவில் காணியில் இருந்து எழுப்பப்பட்டு நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டதுடன் அவர்கள் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த இக்காணியில் குளம் அமைப்பதற்கு புனித பூமி திட்டத்தில் ஏற்பாடு செய்தமை மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு அம்மக்களால் 40 வருடத்துக்கு மேலாக வழிபட்டு வந்த ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் விக்கிரகம் உடைக்கப்பட்டு, தற்போது ஆலயமும் உடைக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டை வன்மையான கண்டிக்கின்றோம்.
இச்செயற்பாட்டின் பின்னணியில் உள்ளவர்களையும், இவ்வாலயத்தை இடித்தவர்களையும் அரசாங்கம் கண்டு பிடித்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்.
அத்தோடு முன்பு இவ்வாலய மூலவிக்கிரகம் உடைக்கப்பட்ட போது இவ்வாலயத்திற்கென பிறிதொரு இடம் வழங்கப்படுவதாக மதவிவகார அமைச்சரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இச்செயற்பாடு இன்னும் நடைபெறவில்லை.
இங்கு வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் இன்னும் வேறு இடம் வழங்கப்படவில்லை. இந்நிலை இந்நாட்டில் தற்போது தமிழ் மக்களுக்கும், இந்து மக்களுக்கும் வாழிடச் சுதந்திரமும், மதச் சுதந்திரமும் இல்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் சிங்கள மக்களுடன் இணைந்து சிங்கள பாடசாலைகளில் கல்வி கற்று வாழும் இத்தமிழ் மக்களின் நிலை தங்களது ஆட்சியில் தான் துன்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டு காலப் பகுதியிலும் இத்தமிழ் மக்களுக்கு இத்துன்பம் வரவில்லை. ஆனால் இன்று பல வகையில் வேதனைப் படுத்தப்படுகின்றனர்.
எனவே இந்நாட்டின் தலைவர் என்ற முறையில் இதனை தீவிரமான விசாரித்து கண்டுபிடித்து ஆலயத்தை இடித்தவர்களுக்கும், விக்கிரகத்தை உடைத்தவர்களுக்கும் சட்டத்தின் முன் தண்டனை பெற வழி செய்வதுடன், இடிக்கப்பட்ட இவ்வாலயத்திற்கு ஏற்ற வேறு ஒரு இடத்தை வழங்கி மீண்டும் இவ்வாலயம் அமைக்கப்படவும், வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் ஓர் இடத்தில் சகல வசதியுடனும் குடியேற்றப்படவும் நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு அன்பாக வேண்டுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சர்வாதிகார தன்மை ஒழிந்து உண்மையான ஜனநாயகம் உருவாக வேண்டும்: தீபாவளி வாழ்த்துச் செய்தியில் யோகேஸ்வரன் எம்பி
இவ்வாண்டில் மலரும் தீபாவளி திருநாளானது இந்நாட்டில் துன்புறும் இந்து மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை மலரச் செய்யும் நன்நாளாக அமைய இறைவனை பிரார்த்தித்து எல்லோருக்கும் இன்ப தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
தீபாவளி வாழ்த்து தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் இத்தீபாவளித் திருநாளானது “நரகாசூரன்” என்னும் கொடிய அரக்கனின் ஆணவத்தை ஸ்ரீமத் நாராயணன் அழித்து அவனை தூயவனாக்கியதை நினைவு கூரும் புனித நாளாக விளங்குகின்றது.
எனவே இந்நாளில் எமது மண்ணில் எம்மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தி வரும் மனித அரக்கர்களின் இனத்துவேச ஆணவத்தை அழித்து, இந்நாட்டின் பூர்வீக குடிகளான எம் தமிழ் இனத்திற்கு வடக்கு கிழக்கு இணைந்த தாயக மண்ணில் நியாயமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கவும், அதன் மூலம் எங்கள் மக்கள் சகல உரிமையும் பெற்று சுதந்திரமாக எம் நாட்டில் வாழ வழிவகுக்கும் நன்நாட்களை உருவாக்கும் முதல் நாளாக இந்நாள் அமைய இறைவனை வேண்டுவோம்.
மேலும் இந்நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார தன்மை ஒழிந்து உண்மையான ஜனநாயகம் உருவாகவும், நீதி நியாயமான நல்லாட்சி எம்மண்ணில் மலரவும், எல்லோரும் இறைவனை இந்நாளில் வேண்டுவதுடன், எம்மிடையே உள்ள சுயநலம் பேணும் உணர்வுகள் மறைந்து பொதுநல உணர்வு உருவாகி “எல்லோரும் வாழ்க” என்ற உண்மையான நல்லெண்ணம் மேலோங்கி நீதி, நியாயம், தர்மம் நிலை கொள்ள வேண்டி, தீப விளக்குகளை ஏற்றி இறைவனை யாவரும் பிரார்த்திப்போம்.
இவ்வேளை இத்தூய நந்நாளில் (தீபாவளித் திருநாளில்) இந்துக்களான எமது மக்கள் பிற உயிர்களை வதைத்து அவற்றின் ஊணை உண்டு இன்பம் காணும் போலி இந்துவாக வாழாது, “ஹிம்சை” செய்யாத அஹிம்சை உணர்வு கொண்ட உண்மையான இந்துவாக வாழும் வகையில் சைவ உணவை உட்கொள்ளுமாறு அன்பாக வேண்டுகின்றோம்.
அத்தோடு இந்நாளில் கேலிக்கை நிகழ்வுகளை தவிர்த்து வறியவர்கள், இடைத்தங்கல் முகாம்களிலும், மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டு வறுமையில் துன்புறும் எமது மக்கள், உடல் உறுப்புக்களை இழந்த உறவுகள், கணவனை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், சிறைக்கூடங்களில் வாழும் உறவுகள், சிறுவர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வாழும் உறவுகள், தமது உறவுளை தாமே கையளித்தும், விசாரணைக்காக அழைத்துச் செல்வதைப் பார்த்தும், கடத்தப்பட்டும்,
இதுவரை அவர்கள் விடுவிக்கப்படாத நிலையில் தேடிப் பரிதவித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகள் போன்றோரின் துன்ப துயரங்கள் நீங்க இறைவன் திருவருள் புரியவேண்டுமென பிராத்திப்பதுடன், அவர்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் நிதி, பொருள், ஏனைய அவசிய ஆதரவுகளை வழங்கி அதன்மூலம் அவர்களின் முகத்திலும், அகத்திலும் மலரும் இன்பம் கண்டு மகிழ்வுறும் இந்துவாக உங்களை உருவாக்கும் ஒளிமயமான திருநாளாக இந்நாளை ஏற்படுத்தி எதிர்கால நந்நாட்களை உருவாக்குவோம் என தெரிவித்தார்.