பக்கங்கள்

பக்கங்கள்

11 நவ., 2013

ஆளுநர் சந்திரசிறியை மாற்றும் பிரேரணை வட மாகாண சபையில் நிறைவேற்றம்!
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி  மாற்றுவதற்கான பிரேரணை வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை கைதடியில் உள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, வடமாகாண சபை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை மாற்ற வேண்டும் என்ற பிரேரணையினை வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சபையில் முன்மொழிந்தார். அந்தப் பிரேரணையை உறுப்பினர் ஆறுமுகம் ரவிகரன் வழிமொழிய தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணையில் இலங்கையில் குடியியல் அல்லது நிர்வாக ரீதியில் கடமையாற்றுகின்ற இராணுவம் அல்லாத ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும். ஆளுநரை நியமிக்கும் பொழுது இப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அதியுச்ச ஜனாதிபதியிடம் கோருகின்றோம் என்றுள்ளது.
அத்துடன், வவுனியா மாவட்டத்தில், பூவரசங்குளம் ஆரம்பப் பாடசாலையில் தங்கியிருக்கும் விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுவதற்கான பிரேரணை  கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவினால் கொண்டுவரப்பட்டது. அப் பிரேரணையை வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனினால் வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, யாழ். மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் ஆளணி நிரப்புதல் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையினை நிறுத்தும்படி வட மாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி பிரேரணை முன்வைத்தார். அதனை விந்தன் கனகரத்தினம் வழிமொழிந்தார்.
அத்துடன், ஆட்சிக்காலம் முடிவுற்று தற்போது நீடிப்புக் காலத்தில் இயங்கி வரும் மாநகர சபை ஆளணியினர் நிரப்புதல் நடவடிக்கையில் ஈடுபட முடியாது எனக்கூறி சபைத் தவிசாளர் கந்தையா சிவஞானமும் இந்த பிரேரணையினை ஆதரித்தார்.