பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2013

இசைப்பிரியா படுகொலை மன்னிக்கமுடியாத குற்றம்! இனியும் இலங்கை மறைக்க முடியாது! அமைச்சர் நாராயணசாமி
இறுதிப்போரில் இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இப்படியான நிகழ்வுகள் நடக்கவில்லை என்று இலங்கை மறைக்க முடியாது. இவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி நேற்று வலியுறுத்தினார்.
 இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு இது தொடர்பான சனல் - 4  வீடியோ வலிமையான ஆதாரமாகும்.
இத்தகைய கொடூரங்களைப் புரிந்தவர்கள் மீது இலங்கை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதான இறுதி முடிவை இந்தியப் பிரதமர் எடுப்பார். 
இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்படுவதை காண்பிக்கும் வகையிலான வீடியோவை சனல்-4  தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் கொடூரமானவையாக இருந்தன. எந்தச் சமூகமும் இதை ஏற்றுக்கொள்ளாது.
மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்று இலங்கை அரசு தொடர்ச்சியாக கூறிவருகின்றது. ஆனால், அங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு இசைப்பிரியா பற்றிய வீடியோ வலிமையான ஆதாரமாகும்.
இசைப்பிரியா தமிழர் என்பது ஒரு புறமிருக்கட்டும், ஒரு பெண்ணை இவ்வாறு நிர்வாணமாக்கி கொலை செய்வது மன்னிக்க முடியாத மனித விரோத நடவடிக்கையாகும், குற்றமாகும். இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது இலங்கை அரசு விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய மத்திய அரசு இன்னும் எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை.
மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் மத்தியக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று வெளியான செய்திகள் தவறானவையாகும்.
கொழும்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கலைஞர் கருணாநிதியும் மாநாட்டுக்கு போக வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு புறம்பாக தமிழக காங்கிரஸ் தலைவரும் பிரதமரிடம் இதை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர்களான சிதம்பரம், வாசன் ஆகியோரும், நானும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முடிவெடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
பொதுநலவாய நடைபெறுவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. எனவே, மத்திய அரசு பிரதமரின் பங்குபற்றல் தொடர்பில் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
அது இன்னும் பரிசீலனை மட்டத்திலேயே இருக்கின்றது. எது எப்படியிருந்த போதிலும், தமிழகத்தினதும் இலங்கைத் தமிழர்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே பிரதமர் மன்மோகன் சிங்கின் முடிவு அமையும் என்றார்.