பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2013

பிந்திய செய்தி 

    நாண்டேட் -பெங்களூர் விரைவு ரயிலில் தீ: 23 பேர் பலி

சனிக்கிழமை இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கொதசேரு ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த நாண்டேட்- பெங்களூர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ரயிலில் டி1 குளிர்சாதனப் பெட்டியில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பெட்டியில் இருக்கை எண் 62ல் இருந்து 72 வரை இருந்த பயணிகள் இந்த விபத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ கசிந்த போது, பெட்டியில் 57பயணிகள் இருந்துள்ளனர். தீ பற்றியது தெரிந்ததும், ரயிலை நிறுத்த அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். பின்னர் பெரும்பாலானவர்களும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர். 
இருப்பினும் இந்த விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.
பலத்த காயம் அடைந்தவர்கள் பெனுகொண்டா, தர்மாவரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தர்மாவரம், புட்டபர்த்தி ஆகிய மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சைக்கான ஏற்பாடுகளுடன் தயாராக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. உடனடி மீட்பு நடவடிக்கைகளில் ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் இறங்கியது. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இன்று காலை 8 மணி அளவில் 8 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பெட்டியில் இருந்த பேட்டரிகளில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று முதல் கட்டமாகத் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ விபத்து ஏற்பட்டபோது, பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
விபத்து குறித்து அறிந்த ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி, தனது அதிர்ச்சியை வெளியிட்டதுடன் உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார்.