பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2013

திட்டமிட்டே மருமகனை ஈ.பி.டி.பியினர் கொன்றனர்! மகள் மீதான குற்றச்சாட்டும் பொய்! றெக்சியனின் மாமியார்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்‌ஷயனை ஈ.பி.டி.பியினரே திட்டமிட்டுக் கொலை செய்தனர் என்றும், எனது  மகளும் றெக்சியனின் மனைவியுமான  அனித்தாவுக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர் க. கமலேந்திரனுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக பொலிஸார் கூறுவது பொய் என்றும் அவரது மாமியாரான கருணானந்தசிவம் தனலட்சுமி தெரிவித்தார்.
நேற்று றெக்சியனின் மரணம் தொடர்பாக யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறியதாவது,
எனது மகளுக்கும் கமலுக்கும் இடையில் தொடர்போ உறவோ கிடையாது. அவர்கள் (ஈ.பி.டி.பி.) எனது வீட்டுக்குள் வந்ததே கிடையாது. வீட்டின் அருகே றெக்சியன் தனக்கென ஏற்பாடு செய்து வைத்திருந்த கொட்டகைக்குத்தான் அவர்கள் வந்து செல்வார்கள். அவர்கள் வந்து செல்லக்கூடிய வகையில் தனி வாசல் இருக்கிறது. அதற்கும் வீட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தங்கள் அரசியல் பிரச்சினைகளுக்காகக் கொலை செய்துவிட்டு இப்போது பழியை எனது மகள் மீதும் போட்டுத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள் என்றார் தனலட்சுமி.
விடுதலைப் புலிகள் மீது பழியை விழுத்தும் விதத்தில் நீண்டகாலமாகத் திட்டமிட்டு இந்தக் கொலையை அவர்கள் செய்துள்ளார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
ஈ.பி.டி.பியின் நீண்டகால உறுப்பினரும் நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவருமான றெக்சியன் நவம்பர் மாதம் 26ம் திகதி புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் அவரது உதவியாளர் மற்றும் றெக்சியனின் மனைவி அனித்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அனித்தா மற்றும் கமல் ஆகியோருக்கு இடையே காணப்பட்ட சட்ட ரீதியற்ற உறவே கொலைக்கான காரணம் என்று பொலிஸார் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அப்படி எந்தவிதத் தொடர்பும் அந்த இருவருக்கும் இடையில் கிடையாது என்று அனித்தாவின் தாயாரும் அவரது பிள்ளைகளும் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
அப்பாவைக் கட்சியை விட்டு விலகுமாறு கமல் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து வந்தார். எங்களுக்கு முன்பாகவே பல தடவைகள் அப்பா கமலுடன் இது தொடர்பில் தொலைபேசியில் முரண்பட்டுள்ளார். கட்சியை விட்டு விலகமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
இத்தனை வருடங்களாக கட்சியில் இருக்கும் என்னை நேற்று வந்த இவர் எப்படி விலகச் சொல்ல முடியும் என்று எங்களிடம் ஆத்திரப்பட்டிருக்கிறார். ஆனாலும் கட்சியைவிட்டு அவரை நீக்கியதாகச் சொல்லி நெடுந்தீவுக்குப் போகவேண்டாம் என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு நவம்பர் முதலாம் திகதி முதல் அவர் அங்கு போகவில்லை. ஆனாலும் யாரோ தன்னைக் கொன்று விடுவார்கள் என்று அவர் அச்சமடைந்திருந்தார் என்கிறார் றெக்சியனின் மகள்.
றெக்சியன் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலைத் தனது மகளோ குடும்பத்தினரோ ஒருபோதும் பரப்பவில்லை என்று சத்தியம் செய்கிறார் தனலட்சுமி. ஈ.பி.டி.பியினரும் ஊரவர்கள் சிலருமே றெகசெியனின் கொலை தொடர்பில் இத்தகைய பல கதைகளைப் பேசினர் என்றும் கூறினார்.
தனது மகள் அனித்தா உண்மையை வெளியே சொல்லாத வகையில் ஈ.பி.டி.பியினரால் மிரட்டப்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
சாவு வீட்டிலன்று கமல் என்னை அழைத்து குடும்பப் பிரச்சினையால் ஏற்பட்ட சாவு என்று பொலிஸாரிடம் கூறுங்கள் என்று சொன்னார் என்கிறார் தனலட்சுமி.
சாவுச் சடங்குகள் நடந்த நாள்கள் முழுவதும் அவர்கள் (ஈ.பி.டி.பியினர்) இங்கே இருந்தார்கள். தனது பிள்ளைகளின் உயிருக்கு அஞ்சி எனது மகள் அவர்கள் சொன்னவற்றுக்கு மறுப்புச் சொல்லாமல் இருந்திருக்கக்கூடும். அதுவே அவள் விட்ட பெரும் பிழை.
பொலிஸாருக்கு முன் உண்மையைச் சொல்லப் பயப்பட்டிருந்தாலும் நீதிபதிக்கு முன்னால் அவள் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
றெக்சியனின் பிள்ளைகளை வளர்க்க அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா வழங்க முன்வந்த உதவிகளைத் தூக்கி எறிந்து நிராகரித்து விட்டார் தனலட்சுமி.
பொலிஸார் நீதியாகப் புலன் விசாரணை நடத்தி கொலைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் தனது மகளுக்கும் கமலுக்கும் இடையிலான உறவால் நிகழ்ந்த கொலை இதுவென வழக்கைத் திசை திருப்பக்கூடாதெனவும் கோரினார்.
விடுதலைப் புலிகள் மீது பழியை விழுத்தும் விதத்தில் நீண்டகாலமாகத் திட்டமிட்டு இந்தக் கொலையை அவர்கள் செய்துள்ளார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.