பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2013

காணாமற்போனோரை தேடும் குழுவின் தலைவருக்குப் பொலிஸ் அச்சுறுத்தல்; பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
திருகோணமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

 
சர்வதேச மனித உரிமைகள் தினமான கடந்த 10ஆம் திகதி திருகோணமலை நகரில் காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவினரால் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது அங்கு வந்த சில பெரும்பான்மையினக் குழப்பவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
 
இதன்போது போராட்டத்தை ஒழுங்குபடுத்திய சுந்தரம் மகேந்திரன் காயமடைந்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்ற வேளை, அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதாகவும், தமிழ் மக்களைத் திரட்டி இனவாதத்தைத் தூண்ட முயற்சிப்பதாகவும் தெரிவித்து நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்வேன் என்று திருகோணமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தன்னை மிரட்டினார் எனச் சுந்தரம் மகேந்திரன் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும், தாக்குதல் நடத்தப்படும் போது அதனைத் தடுக்க முற்படவில்லை என்றும் பொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ள முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.