பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2013

வட மாகாண சபையில் இன்று வரவு செலவுத் திட்டம்!- முதலமைச்சர் சமர்ப்பிக்கிறார்!
வட மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதடியில் நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் சமர்ப்பிக்கவுள்ளார்.
வட மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது, சபையில் எதிர்க்கட்சித் தலைவராக எவரும் பதவி வகிக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரான கந்தசாமி கமலேந்திரன், நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தெரிவான, அங்கஜன் இராமநாதனும், விடுமுறையில் இருப்பதால், எதிர்கட்சித் தலைவர் இல்லாமலேயே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதையடுத்து, இன்றும் நாளையும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதைக் காண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆகியோர் இன்று கைதடியில் உள்ள மாகாண சபை பார்வையாளர் அரங்கிற்கு வரவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது