பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2014

கடைக்கு போன பெண்ணை அடித்து கொன்றது சிறுத்தை; பயத்தில் உறைந்து போயுள்ள கிராம மக்கள்
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு மேற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமம் சோலாடா, மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இரவி (37); விவசாயம் செய்துவரும் இவரது மனைவி பெயர்
கவிதா (32). இவர்களுக்கு பிரியா (13), நவநீதன் (11) என்ற குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, தோட்டத்துக்கு இரவி தண்ணீர் பாய்ச்சிகொண்டிருந்தார், அப்போது குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டு இரவி உடன் இருந்துள்ளனர். 
இரவியிடம் சொல்லிவிட்டு அருகிலுள்ள ஆடாசோலை கிராமத்திலுள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவர வேண்டும் என்று சொன்ன கவிதா  காட்டுவழியாக நடந்து சென்றுள்ளார்.
இரவு நெடுநேரம் ஆகியும் மளிகை கடைக்கு சென்ற கவிதா வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் கொண்ட இரவி, கிராமத்தினரின் உதவியுடன் ஆடாசோலை கிராமத்துக்கு நடந்து சென்று தேடியுள்ளனார்.
அங்கிருந்த மளிகை கடைக்கு கவிதா வரவில்லை என்று தெரிவித்துள்ளனர், இதனால், சந்தேகமடைந்த கிராம மக்கள் நேற்று அதிகாலை 6:00 மணிக்கு ஆயுதங்களுடன் சோலாடா கிராமத்தை ஒட்டியுள்ள வனத்தில் தேடினர்.
சோலாடா கிராமத்திலிருந்து, ஆடாசோலை போகும் வழியில் ஒரு இடத்தில் கவிதாவின் செருப்பு கிடந்தது. இதை பார்த்து சந்தேகம் கொண்ட மக்கள் அந்த இடத்திலிருந்து வணபகுதிக்குள் சிறிது தூரம் சென்று பார்த்துள்ளனர். அங்கு கிழிந்துபோன புடவையின் சிதறல்கள் கிடந்துள்ளது.
மீண்டும், அடர்ந்த வனப்பகுதிக்குள் தேடிச் செற்றபோது, சற்று தொலைவில் கவிதாவின் உடல் சிதைந்த நிலையில், அகோரமாக கிடந்துள்ளது. அவரது உடலின் பெரும்பாலான பாகங்கள் கடித்து குதறப்பட்டிருந்தன. தலை தனியாகவும், உடல் தனியாகவும் துண்டித்து கிடந்துள்ளது. வனத்திலுள்ள விலங்கின் கோரப்பசிக்கு, கவிதா பலியானதை கண்டு கிராமத்தினர் கண்ணீர் விட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்ததும், ஊட்டி ரேஞ்சர் பெரியசாமி தலைமையிலான  வன அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நிலத்தில் பதிந்திருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். மண்ணில் இருந்த கால் தடத்தை வைத்து, கவிதாவை கொன்றது சிறுத்தை என  உறுதி செய்தனர். 
நீலகிரி கலெக்டர் சங்கர், மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ்கோவில்பிள்ளை ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கவிதாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
கவிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கவிதா குடும்பத்துக்கு முதற்கட்ட நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாயை, கணவர் ரவியிடம், மாவட்ட ஆட்சியர் சங்கர் வழங்கினார். 
இதுகுறித்து, நீலகிரி வடக்கு வனக்கோட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோவில் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறுகையில், "சோலாடாவில் பெண் பலியானதற்கு சிறுத்தைதான் காரணம் என்பது உறுதியாக தெரிகிறது, அங்கு சிறுத்தை நடமாடுவதை, அந்தப்பகுதி ஏற்கனவே கிராம மக்கள் பார்த்துள்ளனர். மனிதனை அடித்து சாப்பிட்ட அந்த சிறுத்தை நிச்சயமாக மீண்டும் அப்பகுதிக்கு வரும். மீண்டும் மனிதர்களை தாக்கி கொல்ல முயற்சி செய்யும், அதனால் அந்த சிறுத்தையை பொரிவைத்து பிடிக்க  முதுமலையில் இருந்து கூண்டு கொண்டு வரப்பட்டு சிறுத்தை பிடிக்க ஏற்பாடு செய்யப்படும். அதுவரை இந்தப்பகுதி மக்கள் பயமின்றி வாழ, அப்பகுதியில்  வனத்துறையினரின்  கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.