பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2014

வடக்கை கண்காணிக்க ஐ.நா பொறிமுறை

சிறிலங்காவில் தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா பொறிமுறை ஒன்றை அமைப்பது குறித்து ஜெனிவா தீர்மானம் வரையப்படும் போது கவனத்தில் கொள்ளப்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.

கொழும்பில், ஸ்டீபன் ஜே ராப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசிய போது, இதுபற்றியதொரு யோசனையை முன்வைத்திருந்தனர்.

தமிழர்கள் செறிந்து வாழும் சிறிலங்காவின் வடபகுதியில், தொடர்ந்தும் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதால், தற்போதைய மீறல்களை ஆராயவும், வடபகுதியைக் கண்காணிக்கவும் ஐ.நா பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், ஸ்டீபன் ஜே ராப்பிடம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

அதற்கு, அவர், சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வரையப்படும் போது இந்தக் கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்காவைக் கோரும் இரண்டு தீர்மானங்கள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதனை செய்து முடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எனவே, அடுத்த கட்டமாக அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்து அமெரிக்கா சிந்திக்கிறது என்றும் ஸ்டீபன் ராப் தம்மிடம் தெரிவித்த்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.