பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

மருந்து மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக கண்டி வைத்தியசாலையில் நேற்று அதிகாலை அனுமதிக்கப்பட்டிருந்த லக்ஷ்மன் ஹூலுகல்லவை நேற்றிரவு முதல் காணவில்லை என தெரியவருகிறது.
கலைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளரான அவர், கண்டி வைத்தியசாலையின் 28 வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வைத்தியசாலை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் அவர் அங்கிருந்து
வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹூலுகல்ல விசேட வாகனம் ஒன்றின் மூலம் நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை யார் அழைத்துச் சென்றனர், எங்கு சென்றார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
ராஜபக்சவினர் தன்னை கொலை செய்ய முயற்சித்து வருவதாகவும் தான் இறந்து போனால் அதற்கு மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரே பொறுப்புக் கூறவேண்டும் எனவும் பாதுகாப்பு சம்பந்தமான முன்னாள் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவினர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ள அவர், தன்னை மாத்திரம் அவர்களால் கொலை செய்ய முடியாது எனவும் அவர்களை கொலை செய்து தானும் இறந்து போவேன் என்றும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்ஷ்மன் ஹூலுகல்ல கடந்த 26 ம் திகதி இரவு சுமார் 10 மணியளவில் பெண்ணொருவர் மற்றும் சாரதியுடன் கண்டி குளத்திற்கு அருகில் இருக்கும் சுவிஸ் ஹோட்டலுக்கு சென்றிருந்தார்.  அவருடன் பாதுகாவலர்கள் எவரும் இருக்கவில்லை. இவர்கள் ஹோட்டலின் இரண்டாவது மாடியில் அறை ஒன்றில் தங்கியிருந்தனர்.
இதன் பின்னர் மேலும் சிலர் ஹூலுகல்லவை காண ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு அவர்களை ஹூலுகல்ல அழைத்துச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் ஹோட்டல் ஊழியர், வரவேற்பறைக்கு வந்து இரண்டாவது மாடியில் உள்ள அறையில் இருக்கும் நபர் ஒருவர் சத்தமிடுவதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக இரண்டாவது மாடிக்கு ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அறை கதவை திறந்து வெளியில் வந்த நபர் “என்னை நிறுத்த வேண்டாம் நான் விஷம் குடித்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.  அந்த நபர் மது போதையில் இருப்பதை அறிந்து கொண்ட ஹோட்டல் ஊழியர்கள் அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது பலமாக சத்தமிட்டவாறு தன்னை யார் என்று தெரியுமா எனவும் தான் லக்ஷ்மன் ஹூலுகல்ல எனவும் அவர் கூறியுள்ளார். அப்போது அந்த நபர் லக்ஷ்மன் ஹூலுகல்ல என்பதை ஊழியர்கள் அறிந்துள்ளனர்.
நான் இறந்தால் அதற்கு மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். எனக்கு நாட்டிலும் இருக்க முடியாது. வெளிநாட்டுக்கும் செல்ல முடியாது. என்னை நீங்கள் காப்பற்றினாலும் நான் இறந்து போவேன். எப்படியும் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் எனக் கூறி ஹூலுகல்ல சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் பொலிஸாருக்கு சம்பவம் குறித்து தெரியப்படுத்தியுள்ளனர். பொலிஸார் அங்கு சென்று அவரை கண்டி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
வைத்தியசாலை பொலிஸாரும் அங்கு சமூகமளித்திருந்ததுடன், ஹூலுகல்லவின் சட்டைப் பையில் 27 தூக்க மாத்திரைகள் இருந்துள்ளன. இதனையடுத்தே அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹூலுகல்ல, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் கண்டி வைத்தியசாலையில் இருந்து பலவந்தமாக அம்புலன்ஸ் வண்டியின் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கோத்தபாய தலைவராக இருக்கும் லங்கா ஹொஸ்பிட்டலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜபக்சவினர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக பகிரங்கமான இடம் ஒன்றில் வைத்து லக்ஷ்மன் ஹூலுகல்ல கூறியுள்ள நிலையில், கோத்தபாயவின் அதிகாரத்திற்குள் இருக்கும் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை விஷம் அருந்திய நபரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்திருப்பது சட்ட விரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூலுகல்லவுக்கு மனநல பரிசோதனை
லக்ஷ்மன் ஹூலுகல்ல கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல நிபுணரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூக்க மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு யூனியன் பிரதேசத்தில் இயங்கிய சலாக ரெஜினா சூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்துடன் ஹூலுகல்லவுக்கு தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகிய பின்னர் அது நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஹூலுகல்ல பணிப்பாளராக இருந்து வந்த தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தை ஜனாதிபதி கலைத்தார்.