பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2014

போர்க்குற்றக் காணொளிகளை சர்வதேச சமூகத்திற்கு விற்பனை செய்த அரச ஊடகங்கள்
அரச ஊடகங்களே இறுதிக்கட்டப் போர் தொடர்பான காணொளிகளையும் தகவல்களை சர்வதேச சமூகத்திற்கு விற்பனை செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற பிரதேசத்தில் அரச ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
போர் நடைபெற்ற பிரதேசத்தில் செய்திகளை சேகரித்த அரச ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் தாம் எடுத்து காணொளிகளை அரசாங்கத்திற்கு எதிராக பயன்படுத்த சர்வதேச சமூகத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.
சில காணொளிகள் 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு நபர் தனது மடிக் கணனியை பயன்படுத்தி தகவல்களை வழங்கியுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தனது சொந்த செயற்பாடுகள் காரணமாகவே தோல்வியை சந்திக்க உள்ளது.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக அரசாங்கமே ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் முன் வாக்குறுதியளித்தது. எனினும் அதனை நிறைவேற்ற தவறியுள்ளது.
அத்துடன் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேசம் எதிர்பார்க்கும்படியான சுயாதீனமான விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் உறுதியளித்தது. ஆனால் அரசாங்கம் அவ்வாறு நடக்கவில்லை.
அரசாங்கம் உறுதிமொழியை நிறைவேற்ற தவறியதால், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளது என்றார்.