பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2014

அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐ.தே.கட்சியில் இணையத் தீர்மானம்
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
காலி, ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 60 பேர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
என்னிடம் பேசும் போது அமைச்சர்கள் இதனை கூறினர். ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியை நோக்கிய பயணத்திற்கு வந்துள்ளது என்பதால், கட்சிக்குள் இருக்கும் சிறிய பிரச்சினைகளை தீர்த்து தயாராக இருக்குமாறு அவர்கள் என்னிடம் பேசும் போது தெரிவித்தனர்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்த மக்களுக்கு இன்று பாலும் இல்லை வெள்ளரிக்காயுமில்லை. பால் மாவின் விலையை நினைத்தால் மயக்கம் வருகிறது.
எதிர்காலத்தில் கரண்டிகளில் அளந்தே மக்கள் பால் மாவை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் பாதிப்படைய செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் தம்முடன் இணைந்து கொள்ள உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. நானும் அரசுடன் இணைய போவதாக சிலர் பிரசாரம் செய்தனர். ஊடகங்களும் இதற்கு பிரசாரத்தை பெற்றுக்கொடுத்தன.
அரசாங்கத்திற்கு போகிறீர்களா, இல்லையா என்று என்னிடமும் கேட்டனர். நான் எதனையும் கூறவில்லை. சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு போனார்கள். நான் மட்டுமல்ல எனது நாயும் போகாது என்று கூறியவர்கள் மறுநாள் அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர்.
நான் அரசாங்கத்துடன் இணைய மாட்டேன். எனது நாயை அனுப்பி வைப்பேன். நான் ஐக்கிய தேசியக் கட்சியையும், கட்சியினரை கைவிட்டு செல்ல மாட்டேன் என்றார்.