ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 397 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் மார்ஸ் 148 ஓட்டங்களையும் சிமித் 100 ஓட்டங்களையும் அதிகப்படியாக பெற்றுக் கொடுத்தனர். தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் ஸ்டெயின் அதிகப்படியாக 4 இலக்குகளை வீழ்த்தினார்.
தனது முதலாவது இன்னிங்ஸூக்காக துடுப்பெடுத் தாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 206 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் அதிகப்படியாக ஏபி டி வில்லியர்ஸ் 91 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் ஆஸ்ரேலிய அணி சார்பாக ஜோன்சன் மிகவும் சிறப்பாக பந்து வீசி 7 இலக்குகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸூக்காக துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 4 இலக்குகளை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதில் வோர்ணர் 115 ஓட்டங்களை அதிகப் படியாகப் பெற்றார். 481 என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 200 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 281 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
தென்னாபிரிக்காவின் 2ஆவது இன்னிங்ஸில் ஏபி டி வில்லியர்ஸ் 48 ஓட்டங்களை அதிகப்படியாகப் பெற்றார். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசிய ஜோன்சன் 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.
|