பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2014

மலேசிய விமானத்தை தேட இந்திய கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் நுழைய அனுமதி கேட்கிறது சீனா

5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம், கடந்த 8-ந்தேதி மாயமான சம்பவம்
உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த விமானம் குறித்து இதுவரை எந்த தடயமும் கிடைக்காதது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலை நோக்கி பறந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான மலேசிய விமானத்தில் சீனாவை சேர்ந்த 150 பேர் பயணம் செய்தனர்.
எனவே விமானத்தை தேடும் பணியில் சீனா மும்முரமாக இறங்கியுள்ளது. விமானத்தை தேடும் வேட்டை தற்போது இந்திய கடல்பகுதிகளை நோக்கி திரும்பியுள்ள நிலையில், அந்தமான் கடல் பகுதியில் தேடும் பணிக்காக, அதிநவீன மீட்புக்கப்பல் உள்ளிட்ட 4 போர்க்கப்பல்களை இந்திய கடல்பகுதியில் நுழைய அனுமதிக்குமாறு இந்தியாவிடம் சீனா அனுமதி கேட்டுள்ளது. இந்திய கடல் பகுதியை சீனாவிடமிருந்து காப்பதற்காக இந்திய கடற்படை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் சீன போர்க்கப்பல்களை இந்திய கடல்பகுதியில் அனுமதித்தால், இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை சீனா தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். எனவே சீனாவின் இந்த கோரிக்கை இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது குறித்து இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் குறிப்பாக கடற்படை அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.