அரசியல் சாசனப்படி 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு வாதம்
புதுடெல்லி: அரசியல் சாசனப்படி சாந்தன் உள்பட 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
மேலும், இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் கூறியது.
இதையடுத்து, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு மூன்று நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மாநில அரசே அவர்களை விடுதலை செய்யும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாகன்வதி, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யக் கூடாது என்றும், அரசியல் சாசனப்படி 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றும், தண்டிக்கப்பட்டவர்கள் மனு அளிக்காமலேயே 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது தவறு என்றும் வாதிட்டார்.
தமிழக அரசு வாதம்
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க மாநிடில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மாநில அரசு 7 பேரையும் விடுக்கலாம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.
அதன் அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்பினோம்'' என்றார்.
|