பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான, பணிகளில், கொழும்புக்கான, அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தூதுவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதற்காக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனும், பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்னும், ஜெனிவா சென்றுள்ளனர். 

சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு ஆதரவு திரட்டுவது மற்றும், தீர்மான வரைவு வாசகங்கள் குறித்து உறுப்பு நாடுகளுக்கு விளக்கமளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக, அமெரிக்கத் தூதுவர், மிச்சேல் ஜே சிசன், வொசிங்டனிலுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்ததுடன், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து, ஆதரவு திரட்டி வந்தார். 

அவர் தற்போது, தமது நடவடிக்கைகளை ஜெனிவாவுக்கு மாற்றியுள்ளார். 

அதேவேளை, பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்னும் ஜெனிவா சென்று, ஆதரவு திரட்டி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவசரமாக லண்டன் திரும்பியிருந்தார். 

தீர்மான வரைவு தொடர்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திப்பதற்காகவே அவர் லண்டன் திரும்பியிருந்தார். 

பிரித்தானியப் பிரதமருடன் ஆலோசனைகளை நடத்திய பின்னர். அவர், சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளை தீவிரப்படுத்துவதற்காக மீண்டும்  ஜெனிவா திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.