பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2014


ஜெயலலிதாவே வாங்க... நரேந்திரமோடியைப் போல போட்டியிடுங்க...: பிரேமலதா பேச்சு
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை மாலை மரக்காணத்தில் பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது பேசிய பிரேமலதா,

ஜெயலலிதா மக்கள் முன்பு ஒரு தவறான செய்தியை பரப்பி வருகிறார். அதிமுகவை தவிர வேறு எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டாலும் அது வீணாகிவிடும் என்று சொல்கிறார். தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராக வந்து 3 வருடம் ஆகிறது. இதுவரை எந்த திட்டத்தையும் அவர் நிறைவேற்றவில்லை. அதற்குள் பாரத பிரதமர் என்ற கனவுக்கு ஜெயலலிதா போய்விட்டார். கனவு காண்பது அனைவருக்கும் இயல்பு. ஆனால் ஜெயலலிதா காண்பது பகல் கனவு என்பதை தேர்தல் முடிவுகள் பாடமாக புகட்டும். 
40 தொகுதியை வைத்துக்கொண்டு பிரதமர் கனவு காண்கிறார். இது தமிழ்நாட்டுக்கான தேர்தல் அல்ல. இந்தியாவிற்கான தேர்தல். மொத்தம் 272 மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால்தான் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியும். தமிழ்நாட்டின் மக்களின் கேள்வியாக உங்கள் முன் நாங்கள் கேள்வியை வைக்கிறோம். இந்தியாவிலேயே காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகள் பெரிய கட்சிகள். காங்கிரஸ் போட்டி போடுகிற நிலையில் இல்லை. அதை விட்டுவிடுவோம். பாஜகவை பொறுத்தவரை ஒரே அலைதான் வீசுகிறது. மோடி அலை. தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி.
இப்படி எதுவுமே இல்லாமல் ஜெயலலிதா, வெறுமனே வந்து பிரதமராவேன் என்கிறார். நரேந்திர மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதில் வெற்றி பெற்ற பின்னர்தான் பிரதமராகப் போகிறார். அவரும் முதல் அமைச்சர்தான், ஜெயலலிதாவும் முதல் அமைச்சர்தான். ஜெயலலிதாவே வாங்க. நரேந்திரமோடியைப் போல போட்டியிடுங்க. முதலில் மக்கள் உங்களை ஜெயிக்க வைக்கட்டும். அதன் பிறகு நீங்கள் பிரதமர் கனவு காணலாம். எம்.பி., தேர்தலில் போட்டியிடமாட்டாங்க. நடுவன் அரசில் பங்கும் வகிக்க மாட்டாங்க. 39 தொகுதியை வைத்து எப்படி பிரதமர் ஆக முடியும். ஆகவே அதிமுகவை தவிர வேறு கட்சிக்கும் ஓட்டு போடுவது வீண் என்று ஒரு தவறான கருத்தை மக்கள் முன் விதைக்கிறார்கள். முதல் அமைச்சர் என்றால் தெளிவாக, உண்மையான கருத்தை மக்கள் முன் கூறவேண்டும். தவறான கருத்தை கூறக் கூடாது. ஏனென்றால் அந்தப் பதவி அப்படி. இவ்வாறு பேசினார்.