பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2014

வாக்குப் பெட்டி வைத்திருந்த மேசை ஓட்டையிலிருந்து வாக்குச் சீட்டுகள் மீட்பு

விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு
வாக்குப் பெட்டியினுள் இடாமல் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள மேசை ஓட்டையினுள் இடப்பட்ட வாக்குச்சீட்டுகளே
மாத்தறை உலுவிடிகே பாடசாலையில் இருந்து மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் முடிவடைந்த பின் பாடசாலையொன்றிலிருந்து ஜே. வி. பி. க்கு புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் சில கண்டு பிடிக்கப்பட்டது குறித்து தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வினவப் பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், வாக்களிப்புக்கு முன்னர் வாக்களிப்பு நிலையங்களின் மேசைகளில் உள்ள லாச்சுகளை அகற்றவும் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள மேசையிலுள்ள ஓட்டைகளை அடைக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. தேர்தல் முடிந்து வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற முன் வாக்களிப்பு நிலையத்தை முழுமையாக பரிசோதிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளோம்.
எமது அறிவுறுத் தல்களை முழுமையாக பின்பற்றாததாலே இவ்வாறு பிரச்சினைகள் எழுகிறது. இது மோசமான கவனயீனமாகும். இதற்கு முன்பு நடந்த சில தேர்தல்களிலும் இவ்வாறு புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டன.
ஜே. வி. பி.க்கு அளிக்கப்பட்ட வாக்குகள் என்பதால் பாரிய பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. வேறு கட்சியாக இருந்தால் விவகாரம் வேறு விதமாக இருந்திருக்கும். ஜே. வி. பி. விருப்பு வாக்கு தொடர்பில் அக்கறை செலுத்தாததால் சுமுகமாக பிரச்சினையை சமாளிக்க முடிந்தது. சில வீடுகளில் இருந்து திருட்டு வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அவை வேட்பாளர்கள் அச்சிட்ட மாதிரி வாக்குச்சீட்டுகளாகும் என்றார்.