பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2014

கோபியின் மனைவிக்கு நான்காம் மாடியில் கருச்சிதைவு 
இலங்கை இராணுவத்தால் தேடபப்ட்டுவரும் கோபி மற்றும் கஜதிபனின் துணைவியர்கள் மற்றும் தாயார் ஆகியோர்கள் நான்காம் மாடியில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். 

இந்த சித்திரவதைகளின்போது கோபியின் துணைவியார் கருச்சிதைவிற்குள்ளாகியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீளிணைக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வரும் கோபியின் மனைவி கடந்த மாதம் திருகோணமலையில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கர்ப்பிணியான அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்தநிலையிலேயே அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாகின்றனர் என்றும், அவர்களை மீளிணைக்கும் முயற்சிகளில் கோபி என்று அழைக்கப்படும் கஜீபன் என்பவர் ஈடுபட்டார் என்றும் தெரிவித்து அவரைத் தேடப்படுபவராக அறிவித்தது பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவு. அதைத் தொடர்ந்து வடபகுதி முழுவதும் இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டதுடன், கோபியுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று கூறியும், சந்தேகத்தின் பேரிலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் கடந்த மாதம் 11ஆம் திகதி கோபி என்று கூறப்படும் கஜீபனின் மனைவி சர்மிளா (வயது 26) பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தேடப்படுவரான கோபியின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. கர்ப்பிணிப் பெண்ணான அவர் மறுநாள் 12ஆம் திகதி ரயில் மூலமாகக் கொழும்பில் உள்ள குற்றப் தடுப்புப் பிரிவுக்கு (நாலாம் மாடி) கொண்டு செல்லப்பட்டார்.

இந்தக் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் காரணமாக மூன்று மாதங்களான சர்மிளாவின் கர்ப்பம் 14 ஆம் திகதி காலை கலைந்தது என்று கூறப்படுகின்றது. எனினும் அப்போது அவருக்கு சாதாரணமாக வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகள் கூட வழங்கப்படவில்லை. மாறாக அதன் பின்னரும் அவர் கொழும்பில் இருந்து பூஸாவுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண. இது குறித்து அவர் "பி.பி.ஸி.' செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது, ""இதுவரை 7 பெண்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதம் மீண்டும் நாட்டில் உருவாவது, இனங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போன்ற காரியங்களை மேற்கொள்பவர்களுக்கு அவர்கள் பாதுகாப்பும், உதவிகளும் வழங்கியிருக்கின்றார்கள். அதற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் பூஸா தடுப்பு முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் எவருக்கும் கருச்சிதைவு ஏற்படவில்லை. பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரும் அத்தகைய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்று தெரிவித்திருக்கின்றார். கைது செய்யப்பட்டுள்ள பெண்களை அவர்களுடைய உறவினர்களோ, சட்டத்தரணிகளோ யார் வேண்டுமானாலும் அவர்களைச் சென்று பார்வையிடலாம். இவர்களை மனிதஉரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆணைக்குழுவினர் போன்றவர்கள் சென்று பார்வையிட்டுள்ளார்கள்.'' என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சந்தேக நபர்களைத் தேடும் வேட்டை என்ற பெயரில் பெண்கள் தொடர்ச்சியாக தொல்லைகளுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்று பெண்கள் செயற்பாட்டு அமைப்பு எனும் தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கஜீபனின் மனைவி சர்மிளா மற்றும் கஜீபனின் தாயான 63 வயதுடைய செல்வநாயகி இராசமலர் ஆகியோருக்கு அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை. இவருடைய உடலில் ஈரலுக்கு அருகில் ஷெ­ல் துண்டு ஒன்று எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது.

அறுவைச் சிகிச்சையின் மூலமாகவும் அதனை அகற்ற முடியாது என்ற காரணத்தினால், அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ உதவி அவசியமாக இருக்கின்றது. அப்படி இருந்தும் பூஸா தடுப்பு முகாமில் இவருக்கும் எவ்வித மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை. கஜீபனின் தாயை பரந்தனில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காட்ட அழைத்துச் சென்று விட்டு நேரடியாகவே கொழும்புக்கு கொண்டு சென்றனர். அதனால் அவர் மாற்றுடை எதுவும் எடுத்துச் செல்லவில்லை. இவருக்கு கடந்த வாரமே மாற்றுடை வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் முழுமையாக தகவல்களைப் பெற குடும்பத்தார்களிடம் முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை