பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2014


கொழும்பில் கிட்னி மோசடி: ஹைதராபாத் பொலிஸார் விசாரணை
கொழும்பைத் தளமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுநீரகம் மோசடி குற்றச்சாட்டு குறித்து இந்தியாவின் ஹைதராபாத் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் மேற்கொள்ளப்படும் சிறுநீரக மோசடியில் சிக்கி ஹைதராபாத்தைத் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்துள்ள முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறுநீரக மோசடி காரணமாக திலிப் மாரு என்ற தனது சகோதரர் உயிரிழந்தாக குற்றம் சுமத்தி கணேஷ் என்பவர் தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை ஹைதராபாத் மத்திய பொலிஸில் பதிவு செய்துள்ளார்.
வேலை தேடி விசாகப்பட்டினம் செல்வதாக கூறி, மாரு கடந்த மார்ச் 22 ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எனினும் 6 நாட்களின் பின்னர் அவர் வேலை தேடி கொழும்புக்கு சென்றிருப்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அவருடன் மேலும் இரண்டு இளைஞர்கள் கொழும்புக்கு சென்றிருந்தாக கணேஷ் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மாரு இறந்து விட்டதாக மார்ச் 30 ஆம் திகதி இலங்கை பொலிஸார் தொலைபேசி மூலம் அவரது குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக அவர் இறந்தாகவும் அவரது உடல் அரசாங்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இறுதிக் கிரியைகளுக்காக ஏப்ரல் 3 ஆம் திகதி உடல் ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாரு மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், கணேஷ் அவரது மின்னஞ்சல்களை தேடிப் பார்த்த போது கொழும்பில் இருந்து ஒருவர் மாருவின் சிறுநீரகத்தைக் கொள்வனவு செய்வதற்காக தொடர்பு கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
15 லட்சம் ரூபாவுக்கு சிறுநீரகத்தைக் கொள்வனவு செய்ய மாருவுடன் பல்லராஜூ என்பவர் தொடர்பு கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திலிப் மாருக்கு இலவச விமானப் பயணச் சீட்டு, வீசா மற்றும் தங்குமிட வசதிகளை செய்து தருவதாக கூறி கடவுச்சீட்டை பல்லராஜூ என்பவர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
சிறுநீரகம் எடுக்கப்பட்டதாக தாங்கள் கூறவில்லை எனவும் மாரு, சத்திர சிகிச்சையின் போதே அல்லது அதற்கு பின்னரோ உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மாருவின் மின்னஞ்சல்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மின்னஞ்சல்கள் மற்றும் செல்போன் தரவுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.