பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2014


 திருமலை மாணவர் கொலைக்கு பொறுப்புக் கூறுமாறு போராட்டம்; நியூயோர்க்கில் சர்வதேச மன்னிப்புச் சபை முன்னெடுப்பு 
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திச் சர்வதேச மன்னிப்புச் சபையின் இளைஞர்
பிரிவினால் நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கான இலங்கையின் பிரதிவதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவின் அலுவலகத்துக்கு முன்பாகவே இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
 
திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு 5 மாணவர்கள், இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாகச் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து வருகின்றது. 
 
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 13 விசேட அதிரடிப் படையின் வீரர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பெருமளவிலான இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். 
 
போராட்டம் நடைபெற்றுக்  கொண்டிருந்த போது சவேந்திர சில்வா, தமது அலுவலக அறையின் ஜன்னல் கண்ணாடியின் மூலம் போராட்டத்தை அவதானித்த பின்னர் ஜன்னலின் திரையை மூடிக் கொண்டமையை இன்னர் சிற்றி பிரஸ் காணொலியாக வெளியிட்டுள்ளது.
 
போராட்டத்தின் பின்னர், அலுவலகத்தினுள் நுழைந்த மன்னிப்புச் சபையின் இளையோர் பிரதிநிதி, சவேந்திர சில்வாவுடன் உரையாடியதாகவும் பொறுப்புக் கூறல் தொடர்பாக விடுத்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக சவேந்திர சில்வா அவரிடம் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.