பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014


மோடியுடன் கொள்கை ரீதியாக ஒத்துப்போகும் கட்சி அதிமுக : கனிமொழி
திண்டுக்கல் தி.மு.க. வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து தி.மு.க. மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி. திண்டுக்கல், நாகல்நகர், பஞ்சம்பட்டி, ஆத்தூர் உள்பட பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டார். திண்டுக்கல்லில் திறந்தவேனில் நின்றபடி
கனிமொழி எம்.பி. வாக்குசேகரித்து பேசியபோது,   ‘’தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முன்னேறிச் செல்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் திண்டுக்கல்லில் 20 கொலைகள் நடந்திருக்கிறது.


இதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள காவல்துறை மெத்தனமாக உள்ளது. மேலும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்துவதின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கவுள்ள பொருளாதார வளர்ச்சியை தடுத்தவர் ஜெயலலிதா.
தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தமிழகத்திற்கான சாலை வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டங்கள் கிடப் பில் உள்ளதாக நெடுஞ்சாலை துறை இயக்குனர் ரெட்டி கூறியுள்ளார். இங்கு திண்டுக்கல்& தேனி&குமுளி சாலை அகலப்படுத்தும் திட்டமும் அ.தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கினால் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
இத்தனை நாட்களாக ஜெயலலிதா இந்துத்துவ ஆதரவாளராக இருந்துவந்தார். ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது? என்று கேட்டவர், கரசேவைக்கு ஆள் அனுப்பியவர், தமிழகத்தில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவந்தவர் ஜெயலலிதா.


அ.தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தபோது, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள் என்று நினைத்து இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று கூறியவர் ஜெயலலிதா. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கலைஞர் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தபோது, அதற்கு தானும் காரணம் என்று உரிமை கொண்டாடுகிறார். இப்போது தேர்தல் வந்தவுடன் திடீரென்று மதசார்பற்றவர்போல் ஜெயலலிதா பேசுவதை இஸ்லாமிய மக்கள் நம்பமாட்டார்கள்.
சிறுபான்மையினர் நல இயக்குனரகம், உருது அகாடமி, உளேமாக்கள் ஓய்வூதியம் என்று சிறுபான்மை யினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தியது. மேலும் ஜெயலலிதா மதசார்பு கொள்கை உடையவர். மோடியுடன் கொள்கை ரீதியாக ஒத்துப்போகும் கட்சி ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. கட்சி’’என்று தெரிவித்தார்.