பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2014

பான் கீ மூனுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா மதிக்க வேண்டும் - என்கிறது ஐ.நா

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009ம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐ.நா பெண் பேச்சாளர் எரி கனேகோ தெரிவித்துள்ளார். 

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் ஐ.நா பொதுச்செயலருடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கையெழுத்திட்ட கூட்டறிக்கையை, சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்க வேண்டிய கடப்பாடு இன்னமும் உள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துடன். ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்தி சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதஉரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டியது முக்கியம் என்று ஐ.நா பொதுச்செயலர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதிலும், நிலையான அமைதியையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் கொண்டுள்ள உறுதியை, ஐ.நா பொதுச்செயலர் வரவேற்கிறார்.

சிறிலங்கா மேற்கொள்ளும் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஐ.நா தொடர்ந்து சிறிலங்காவுடன் பேச்சுக்களை நடத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.