பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2014


கோட்டை ரயில் நிலைய குழப்பநிலை:

திணைக்களம், பொலிஸார் தனித்தனியான விசாரணை



கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் பொலிஸாரும் ரயில்வே
திணைக்களமும் தனித்தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ரயில் ஊழியர்களை நிரந்தரமாக்குமாறு கோரி ரயில்வே ஊழியர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் ரயில் பாதையில் அமர்ந்து போராட்டம் நடத்தின.
இதனால் ரயில் சேவைகள் தடைப்பட்டதோடு, பொலிஸார் தலையிட்டு ஆர்ப்பாட்டக்கார்களை அகற்றினர். தம்மை நிரந்தரமாக்குமாறு கோரி ரயில் ஊழியர்கள் குழுவொன்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கடந்த 2 தினங்களாக போராட்டம் நடத்தினர்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து பிரச்சினைக்கு தீர்வுகாண்பதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் சில ரயில் ஊழியர்கள் ரயில் பாதையில் அமர்ந்து ரயில்கள் பயணிப்பதற்கு இடையூறாக செயற்பட்டனர்.
பொலிஸார் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்ததோடு இதில் 5 ரயில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்துவதோடு குழப்பம் ஏற்படுத்திய ரயில் ஊழியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.