13 ஐ தாண்டிய தீர்வே தமிழருக்கு வேண்டும்; கூட்டமைப்பிடம் இந்திய அதிகாரிகள் |
இலங்கைத் தமிழ் மக்களின் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாமும் ஒரு போதும் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், அதனையும் தாண்டிய தீர்வுத் திட்டமே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்
என்பதை வலியுறுத்துவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வருகைதந்த, இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களைக் கையாளும் மூத்த அதிகாரியான திருமதி சுஜித்திராதுரை சுவாமிநாதன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிச் செயலாளர் விஸ்வேஷ் நேம்கி ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இந்தச் சந்திப்புத் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவிக்கையில்,
மீனவர் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடினோம். தமிழக மீனவர்கள் அதி நவீன இயந்திரங்கள், ரோலர்களுடன் எமது கடல் பிரதேசத்தினுள் வந்து எமது வளங்களை அழிக்கின்றனர். எமது மீனவர்கள் போரின் கோரப் பிடியில் சிக்கி தற்போதுதான் மீண்டு கொண்டிருக்கின்றனர்.
தமிழக மீனவர்களின் வருகையால் அவர்கள் மிகுந்த பாதிப்பை எதிர்கொள்கின்றனர். ஏற்கனவே சிங்கள மீனவர்களின் வருகையால் பாதிப்புக்கள் எதிர்கொள்வது ஒருபுறம் இருக்க மறுபுறம் தமிழக மீனவர்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினோம்.
மேலும் இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு விடயத்தையும் சுட்டிக்காட்டினோம். இராணுவத்தினரின் நில, தொழில், வளஆக்கிரமிப்பினால் எமது மக்கள் நடுத்தெருவுக்கு வருகின்ற நிலைமையே இருக்கின்றது. இதனால் இன்னமும் லட்சக் கணக்கான மக்கள் இங்கும், இந்தியாவிலும் அகதிகளாக இருக்கின்றனர்.
இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அமைக்கப்பட்ட மாகாண சபையைக் கூட கொண்டு நடத்துவதற்கு இலங்கை அரசு அனுமதிக்க்கவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடவில்லை. நாம் இலங்கை அரசுடன் பேச்சுத் தயாராக இருக்கின்றோம் என்ற போதும், இலங்கை அரசு அதற்குத் தயாராக இல்லை.
எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு இந்தியா உதவ வேண்டும். இந்தப் பிராந்தியத்தின் வல்லாதிக்க நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியா எமது அரசியல் தீர்வுக்கு உதவவேண்டும் என்றார்.
இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சுஜித்திரா, தாம் 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வாகும் என்று சொல்லவில்லை.13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனை கட்டியயழுப்பவேண்டும்.13 ஆவது திருத்தச் சட்டத்தைத் தாண்டிய தீர்வு வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டனர் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.அமையும் புதிய ஆட்சியிலாவது எமது பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் அவர்களிடம் கூறியதாகவும் மாவை தெரிவித்தார்.
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼