பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2014

நைஜீரியாவில் 300 மாணவிகள் கடத்தல் விவகாரம்: \'போகோ ஹாரம்\' பயங்கரவாத அமைப்பாக ஐநா அறிவிப்பு 
நைஜீரியாவில் 300 பாடசாலை மாணவிகளை கடத்திய போகோ ஹாரம் அமைப்பு, அல் கொய்தா அமைப்புடன் இணைந்த பயங்கரவாத அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
 
நைஜீரியாவில் போகோ ஹாரம் என்ற பயங்கரவாத அமைப்பு, கடந்த மாதம் 14-ம் திகதி நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலம் சிபோக் கிராமத்தின் பள்ளியில் இருந்து 300 மாணவிகளை துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றனர். இதில் 223 மாணவிகளை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கடத்தி வைத்துள்ளனர் என்றும் மற்ற மாணவிகள் கடத்தலின்போது தப்பித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
 
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடாக நைஜீரியா இணைந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் போகோ ஹாரம் அமைப்பை, அல் கொய்தாவுடன் இணைந்து செயல்படும் தீவிரவாத அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
 
இதனை வரவேற்ற ஐ.நா வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா போவர், போகோ ஹாரம் அமைப்பினர் பல காலமாக, உலக அளவில் அச்சுறுத்தி வரும் பயங்கரவாத அமைப்பான அல் கொய்தாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் அதிகாரபூர்வமாக இருக்கின்றன. முக்கியமாக இவர்கள் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை தாக்குதலுக்காக பயன்படுத்திவருகின்றனர்.
 
ஆகவே போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஒடுக்கப்பட வேண்டிய இயக்கமாக இன்று ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படுகிறார்கள். போகோ ஹாரம் பயங்கரவாதிகளை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடி வரும் நைஜீரிய அரசுக்கு இந்த அறிவிப்பு ஆதரவானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் என்றார்.
 
நைஜீரிய பயங்கரவாதிகளை அழிக்க முழு அளவில் போர் நடத்தப்படும் என்று ஆப்ரிக்க நாடுகள் அறிவித்துள்ளன. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடக்கு பகுதியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். நைஜீரியாவை முழு இஸ்லாமிய நாடாக அறிவிக்க வேண்டும், மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றக் கூடாது என்று கூறி, போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.