பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2014

நீ புலியா?- வடமாகாண சபை உறுப்பினரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை 3.30 மணியளவில் ரவிகரன் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் , நீங்கள் விடுதலைப்புலியா? பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதா? நீங்கள் யார் எந்தக்கட்சினை சேர்ந்தவர்? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மே 18 இற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இச்சம்பவம் ரவிகரனின் வீடு அமைந்துள்ள முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் சற்று பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரவிகரன் தெரிவிக்கையில்,
நிமிர்ந்து நிற்கும் தமிழனை பயங்கரவாதியாக அடையாளப்படுத்துவதையே இந்த விசாரணை காட்டுகிறது. தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட என் மீது நடைபெறும் விசாரணைகள் இலங்கையில் ஜனநாயகத்தின் நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. 
மாலை 3.30 மணியளவில் வருகை தந்த நால்வரால் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களை உறுதிப்படுத்துமாறு கேட்டபொழுது ஒருவர் ரி.ஐ.டி எனக்குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையையும் மற்றையவர் இலங்கை பொலிஸ் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் காண்பித்தனர்.
இவ்விசாரணை இப்பொழுது இடம்பெறுவதற்கான காரணம் என்ன என்று கேட்ட பொழுது, நாம் கிளிநொச்சி அலுவலகத்தில் இருந்து வருகிறோம்.
இது கொழும்பில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே நடைபெறுகிறது என்று கூறி என்னைப் பற்றியும் எனது குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பிலும் விபரங்களை கேட்டு பதிவு செய்து கொண்டு மேலும் சில கேள்விகளை கேட்டுவிட்டு அவசியம் ஏற்படின் மீண்டும் தொடர்பு கொள்கிறோம் என்று கூறிச்சென்றார்கள்.
நாம் இன்று மக்களின் எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு களத்தில் நிற்கும் மக்களின் பிரதிநிதிகள். மக்களின் இன்னல்களையும் இடர்களையும் அகற்ற முனைய வேண்டியது எமது கடமை. தென்னிலங்கை இனச்சுத்திகரிப்பு அரசியலுக்கு முரணாக நாம் குரல் கொடுப்பதற்கு எத்தனை தடைகள் இடையூறுகள் வரினும் எம் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக தொடர்ந்தும் போராடுவோம் என்றார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மே-18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்த முன்னெடுக்கப்பட்ட ஓர் அச்சுறுத்தலே தன்னிடம் இடம்பெற்ற விசாரணை என ரவிகரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவாலயம் அமைக்கக்கோரி கடந்த மாசி மாதம் வடமாகாண சபையில் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதும் அது தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் பல சிங்கள இனவாத அரசியல் தலைவர்களால் எதிர் வாதங்களை முன்வைத்திருந்த நிலையில் மே 18 இற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று ரவிகரன் விசாரிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.