பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014



சி.பி.ஐ. பணியில் சேர்ந்த சில மணிநேரங்களிலேயே
அர்ச்சனா ராமசுந்தரம் சஸ்பெண்ட் : தமிழக அரசின் அதிரடியால்
காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!
 


தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.)
கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். சி.பி.ஐ. அமைப்பின் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

1980-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண் இணை-இயக்குனர் பொறுப்புகளை வகித்தவர். பல்வேறு பொருளாதார குற்றங்களை திறமையாக கையாண்டுள்ளார்.
குறிப்பாக முத்திரை தாள் மோசடி வழக்கை புலன் விசாரணை செய்து பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர். இந்த பதவிக்கு டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான நியமன குழு இதற்கான ஒப்புதலை வழங்கியது.
இந்நிலையில்,  தமிழக அரசு அனுமதியின்றி சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்ற, டி.ஜி.பி.அர்ச்சனா ராமசுந்தரம் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 பணியில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:  தமிழக காவல்துறையின் சீருடையாளர் பணியாளர் குழுமத்தின் தலைவராக இருந்தவர் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம். இவர் அண்மையில் மத்திய அரசு பணியான சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
 இந்த பணியில் சேருவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கிவிட்ட நிலையில், தமிழக அரசு இவரை பணியில் இருந்து விடுவிக்காமலும், அந்த பணியில் சேருவதற்கான அனுமதியும் வழங்காமல் இருந்தது.
 இந்நிலையில் அர்ச்சனா ராமசுந்தரம், சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக புது தில்லியில் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். அர்ச்சனாவின் இந்த நடவடிக்கை, தமிழக அரசு அதிகாரிகளையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 இதற்கிடையே வியாழக்கிழமை இரவு தமிழக அரசின் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். சி.பி.ஐ. பணியில் சேர்ந்த சில மணிநேரங்களிலேயே, தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
 அர்ச்சனா சி.பி.ஐ. பணியில் சேருவதற்கு தமிழக அரசின் அனுமதி பெறாமல், மாநில அரசு பணியில் இருந்து விடுவிக்காமல் இருந்த நிலையில், அவர் மத்திய அரசு பணியான சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றது அரசு அதிகாரிகளின் பணி வரன்முறைகளை மீறியச் செயலாகவும், பணியில் ஒழுங்கீன மாகவும் தமிழக அரசால் பார்க்கப்பட்டுள்ளது.
 மேலும் தமிழக அரசு, இது தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஒரு கடிதமும் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், அர்ச்சனா அனுமதி இல்லாமல் சென்றதும், மாநில அரசு பணியில் விடுவிக்கப்படாததும் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவரை மீண்டும் தமிழக அரசின் தலைமையிடத்துக்கு அனுப்பும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.