பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014


சுரேஷ் பிரபுவை புதிய மந்திரி சபையில் மோடி சேர்த்துக் கொள்வாரா?
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.பி.க்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்களின் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் நாட்டின்
புதிய பிரதமராக நரேந்திர மோடி முறைப்படி இன்று தேர்வு செய்யப்படுகிறார். இதுதொடர்பாக ஜனாதிபதியையும் மோடி இன்று சந்திக்கிறார்.

இந்நிலையில், அக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று டெல்லி சென்று மோடியை சந்திக்கிறார்.
பா.ஜ.க. மூத்த தலைவர்களுடனான சந்திப்பில் உத்தவ் தாக்கரே மோடியின் புதிய மந்திரி சபையில் தனது கட்சி எம்.பி.க்களுக்கு மந்திரி பதவிகள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  எனினும், மோடி தனது மந்திரி சபையை சிறிய அளவிலேயே வைத்துக் கொள்ளவே விரும்புகிறார் என்பதையும்  சிவசேனா கவனத்துடன் கையாண்டு வருகிறது.
சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுரேஷ் பிரபுவை புதிய மந்திரி சபையில் மோடி சேர்த்துக் கொள்வார் என்று சிவசேனா எதிர்பார்க்கிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மந்திரி சபையில் மின்சாரத்துறை மந்திரியாக இருந்த சுரேஷ் பிரபு திறமைக்கும், நேர்மைக்கும் பேர் போனவர். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் 20 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.