பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூன், 2014


16வது மக்களவையின் புதிய சபாநாயகராக பொறுப்பேற்றார் சுமித்ரா மகாஜன்

16வது மக்களவையின் புதிய சபாநாயகராக வெள்ளிக்கிழமை முறைப்படி தேந்தெடுக்கப்பட்டார் சுமித்ரா மகாஜன். தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகராக பொறுப்பேற்றார்.  



சுமித்ரா மகாஜனை பரிந்துரைக்கும் தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடியுடன், பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரும் முன்வைத்தனர்.
கடந்த ஆட்சியின் 15வது மக்களவையில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெகஜீவன் ராமின் மகளும் காங்கிரஸின் எம்.பி.யுமான மீராகுமார். முதல் பெண் மக்களவைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற மீரா குமாரைத் தொடர்ந்து, இப்போதைய 16-வது மக்களவையிலும் பெண் ஒருவரே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுமித்ரா மகாஜன் (வயது 71). மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்து வளர்ந்தவரான இவர், அதே தொகுதியில் 1989 முதல் தொடர்ந்து எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 1999 முதல் 2004 வரை மத்திய இணை அமைச்சராக சுமித்ரா பதவி வகித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தம்பிதுரை (அதிமுக), சுதிப் பண்டோபாத்தியாய் (திரிணமுல் காங்கிரஸ்), மஹ்தாப் (பிஜேடி), முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி), ஹெச்.டி.தேவகவுடா (மதசார்பற்ற ஜனதா தளம்), சுப்ரியா (தேசியவாத காங்கிரஸ்) முகமது சாலிப் (மார்க்சிஸ்ட்) ஜிதேந்திர ரெட்டி (டி.ஆர்.எஸ்.) ஆகிய எதிர்கட்சித் தலைவர்கள் உள்பட 19 பேர், சுமித்ரா மகாஜனின் பெயரை பரிந்துரைத்தனர்.